கான்பூர் (உத்தரப் பிரதேசம்): மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளரான ஒன்றிய எரிசக்தித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, "இந்தியாவின் 80 விழுக்காடு அளவுக்கு பெட்ரோலியப் பொருள்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆனால், கரோனா தொற்றின் காரணமாக இரண்டு ஆண்டுகளாக எரிசக்தித் துறையில் முதலீடுகள் சீராக இல்லை. இதன் காரணமாகவே பெட்ரோல் - டீசல் பொருள்கள் விலை உயர்வைச் சந்தித்து வருகின்றன.
இறக்குமதிக்கான விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது. எனவே புதுப்பிக்கத்தக்க எரிசக்தியைப் பயன்படுத்துவதற்கான கூடுதல் திட்டங்களைக் கொண்டுவர ஒன்றிய அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது" என்று தெரிவித்தார்.
டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 109.69 ரூபாயாகவும், டீசல் விலை லிட்டருக்கு 98.42 ரூபாயாகவும் உள்ளது. சென்னையில் பெட்ரோல் விலை 106.35 ரூபாயாகவும், டீசல் விலை 102.59 ரூபாயாகவும் உள்ளது.
மும்பையில் பெட்ரோல் - டீசல் விலை முறையே 115.50 ரூபாயாகவும், 106.62 ரூபாயாகவும், கொல்கத்தாவில் பெட்ரோல் - டீசல் விலை முறையே 110.15 ரூபாயாகவும், 101.56 ரூபாயாகவும் உள்ளது.
பெட்ரோல் டீசல் விலையேற்றம் குறித்த உண்மை நிலவரம்
2014ஆம் நரேந்திர மோடி அரசு பதவியேற்றபோது பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 9.48 ரூபாயாகவும், டீசல் மீது லிட்டருக்கு 3.56 ரூபாயாகவும் இருந்தது. உலக அளவில் ஏற்பட்ட கரோனா பெருந்தொற்று தாக்கத்தினால் கச்சா எண்ணெய் தேக்கமடைந்தது.
அப்போது, அதன் விலை வீழ்ச்சியடைந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திய மத்திய அரசு, லாபங்களை ஈட்ட, நவம்பர் 2014 முதல் ஜனவரி 2016 வரை ஒன்பது முறை பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை உயர்த்தியது.
தொடர்ந்து 15 மாதங்களில், பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு 11.77 ரூபாயாகவும், டீசல் வரி லிட்டருக்கு 13.47 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இது அரசுக்கு 2016-17ஆம் நிதியாண்டில் இரண்டு மடங்கிற்கும் மேலாக; அதாவது 2,42,000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டித்தர உதவியது. இதுவே, 2014-15ஆம் நிதியாண்டில் 99,000 கோடி ரூபாய் மட்டும் தான் அரசு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியிலிருந்து வருவாய் ஈட்டியதென்பது குறிப்பிடத்தக்கது.
இச்சூழலில், அக்டோபர் 2017ஆம் ஆண்டு கலால் வரியை இரண்டு ரூபாயாகவும், 2018ஆம் ஆண்டு 1.50 ரூபாயாகவும் குறைத்தது. ஆனால் சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்ட அரசு, ஜூலை 2019ஆம் ஆண்டு பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 2 ரூபாயாகஉயர்த்தியது.
மீண்டும் மார்ச் 2020ஆம் ஆண்டு 3 ரூபாயாக உயர்த்தியது. அந்த ஆண்டே மே மாதத்தில், பெட்ரோல் மீதான கலால் வரியை லிட்டருக்கு 10 ரூபாயாகவும், டீசல் லிட்டருக்கு 13 ரூபாயாகவும் உயர்த்தியது. மொத்தமாக மே 2020 நிலவரப்படி, பெட்ரோல் மீதான கலால் வரியை 32.98 ரூபாயாகவும், டீசல் மீதான கலால் வரியை 31.83 ரூபாயாகவும் அரசு உயர்த்தியிருந்தது.
இதையும் படிங்க:வணிக பயன்பாட்டுக்கான சமையல் எரிவாயு விலை ரூ. 266 உயர்வு