இந்தியாவில் கரோனா வைரஸ் (தீநுண்மி) தொற்றால் ஏற்பட்ட பாதிப்புகள் காரணமாக, தகவல் தொழில்நுட்பத் துறை பல மாற்றங்களை சந்தித்துவருகிறது. அந்த வகையில், பொருளாதார மந்தநிலைக்கு மத்தியில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி, இணைய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து, இந்திய தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்பான ஃபிக்கியின் தகவல் தொழில்நுட்பப்பிரிவு ஒருங்கிணைப்பாளர் ராஜாராம் வெங்கட்ராமன், நமது ஈடிவி பாரத்திடம் பேசியபோது,
"நடப்பு நிதியாண்டில் தகவல் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சி குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தடுத்த காலாண்டுகளில் பொருளாதார வளர்ச்சி சீரடைந்து ஒட்டுமொத்தமாக 2% என்ற அளவிற்கு வளர்ச்சி இருக்கும். இணைய வர்த்தகம், தொலைத்தொடர்பு, டிஜிட்டல் மார்கெட்டிங், சில்லறை வணிகம், ஆட்டோமொபைல் உள்ளிட்ட அனைத்து துறை நிறுவனங்களும் இணைய வழியில் தங்களது வணிகத்தை முன்னெடுத்துவருகின்றன. இதனால் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு கரோனாவால் பெரிய அளவு பாதிப்பு ஏற்படவில்லை.
உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள நிறுவனங்கள் இந்திய தொழில்நுட்பத்துறையை நம்பியிருக்கும் சூழல் நிலவுகிறது. தற்போது ஆட்டோமேஷன் (தானியங்கி தொழில்நுட்பம்) துறையில் இந்தியா முன்னிலைப் பெற்றுவருகிறது. பல பன்னாட்டு நிறுவனங்களின் அன்றாட வணிகத்தை இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள் கையாண்டுவருகின்றன. ஆட்டோமேஷன் மூலம் ஒரு நபர், 20 நாள்கள் செய்யும் வேலையை ஒரேநாளில் செய்ய முடியும். 6 நபர்கள் செய்யும் வேலையை ஒரே ஒரு ரோபா செய்யும் வகையில் தொழில்நுட்ப வளர்ச்சி பெற்றுள்ளோம்.