உலகின் வேகமாக வளர்ந்துவரும் நாடுகளின் பட்டியலில் இந்தியா பல ஆண்டுகளாக முன்னணி இடம் வகிக்கிறது. இந்தியாவின் பொருளாதார வலிமையை இது குறிப்பதாக அரசும் பல்வேறு பொருளாதார வல்லுநர்களும் கூறிவருகின்றனர். இந்தத் தகவல் கள யதார்த்தத்துடன் ஒத்துப்போகின்றதா என்பதை நாம் ஆய்வு செய்து பார்க்க வேண்டும்.
ஜிடிபி என்றால் என்ன?
நாட்டின் ஒட்டுமொத்த நுகர்வு, சரக்கு மற்றும் சேவைத் துறையின் அளவீடு, அரசின் செலவீனம், தனியார் முதலீடு, ஏற்றுமதி வருவாய் உள்ளிட்ட கூறுகளின் ஒட்டுமொத்த அளவீடே உள்நாட்டு மொத்தஉற்பத்தி எனப்படும் ஜிடிபி ஆகும்.
உலகின் பெரிய பொருளாதார நாடுகள் பட்டியலில் ஐந்தாவது இடத்திலிருந்த இந்தியா தற்போது ஏழாவது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்தச் சரிவுக்குப்பின் நாட்டில் நிலவு பொருளாதார சிக்கல்கள் குறித்த புள்ளி விவரங்களின் அலசல் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது.
ஜிடிபி வளர்ச்சிக்கான சரியான குறியீடா?
மேற்கண்ட பல்வேறு அம்சங்களின் ஒட்டுமொத்த தொகுப்பாக உள்ள ஜிடிபி, வளர்ச்சிக்கான நேரடிக் குறியீடாகக் கொள்ள முடியாது. காரணம், பொருளாதார நடவடிக்கையான நுகர்வு, முதலீடு, செலவீனங்கள் போன்றவற்றில் பெரும்பான்மை மக்களின் பங்களிப்பு எந்த அளவில் உள்ளது என்பதை நாம் உற்று நோக்க வேண்டும்.
இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள மக்களின் எண்ணிக்கை 20 கோடி எனப் புள்ளிவிவரம் கூறுகிறது. நாட்டின் 20 சதவிகித மக்களான இவர்கள் நாட்டின் ஜிடிபியில் வெறும் இரண்டு சதவிகித பங்களிப்பையே அளிக்கின்றனர். அப்படியானால் பொருளாதார ரீதியாக உயர்ந்தவர்களே நாட்டின் பெரும்பாலான பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் சக்தியைக் கொண்டுள்ளனர்.
இது நாட்டு மக்களின் பொருளாதார ஏற்றத் தாழ்வு குறித்த யதார்த்த நிலையை உணர்த்துகிறது. உலக அளவில் உணவுக்காக திண்டாடும் மக்களின் எண்ணிக்கையில் இந்தியா இன்னும் மோசமான நிலையிலேயேதான் தொடர்கிறது.
நாட்டின் ஜிடிபி குறைந்ததாகப் பலரும் தற்போது புலம்பிக்கொண்டிருக்கும் சூழலில் ஜிடிபி வளர்ச்சியே உண்மை நிலையை உணர்த்துவதாக இல்லை என்பதைப் பொருளாதார வல்லுநர்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஜிடிபி எண்ணிக்கையில் கவனம் செலுத்தாமல் மக்களுக்கான உண்மையான வளர்ச்சி நோக்கி நமது பார்வையைச் செலுத்த வேண்டும்.