தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / business

கரோனா: இந்தியா பொருளாதாரத்தில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும்? - ஆர்.பி.ஐ. முன்னாள் இயக்குநர் பதில் - தமிழ் செய்திகள்

ஹைதராபாத்: உலகப் பொருளாதாரம் திணறிவருகிறது. உலகளவில் உள்ள பொருளாதார திட்டகுழுவினர் இந்த சிக்கலிலிருந்து மீண்டுவருவது எப்படி என கடும் சிந்தனையில் உள்ளனர். இதுபோன்ற சூழலில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் துவுரி சுப்பாராவிடம் ஈநாடு செய்தியாளர் நடத்திய பிரத்யேக நேர்காணலின் தமிழாக்கம் இதோ...

RBI
RBI

By

Published : Apr 24, 2020, 9:24 PM IST

Updated : Apr 26, 2020, 2:30 PM IST

உலக பொருளாதாரம் கரோனா பாதிப்பு பேரிடரை சந்தித்துவரும் சூழலில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் நம்மிடம் பிரத்தியேக கருத்துகளை பகிரவுள்ளார். 2008ஆம் ஆண்டு உலக பொருளாதார மந்தநிலை ஏற்பட்ட போது இவர் இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் பொறுப்பிலிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

கரோனா பாதிப்பு இந்திய பொருளாதாரத்தில் எத்தகையத் தாக்கத்தை ஏற்படுத்தும்?

உலக நாடுகள் கரோனா பாதிப்பின் காரணமாக 2008ஆம் ஆண்டு மந்தநிலையைக் காட்டிலும் பெரும் பொருளாதார சரிவைச் சந்திக்கும் என சர்வதேச நிதியம் எச்சரித்துள்ளது. கரோனா பாதிப்பு என்பது பொருளாதாரத்தில் வெளியிலிருந்து தாக்குதல் நடத்தியுள்ளது. அரசு பல்வேறு சீரமைப்பு அறிவிப்புகளை வெளியிட்டாலும் லாக்டவுன் காரணமாக வர்த்தக நடவடிக்கை எழுச்சி பெறவில்லை.

கரோனாவுக்கு முன்னரே இந்திய பொருளாதாரம் சரிவிலிருந்த நிலையில் இதன் தாக்கம் மேலும் எத்தகைய விளைவுகளை ஏற்படுத்தும்?

சர்வதேச நிதியம் இந்தியாவின் நடப்பாண்டு வளர்ச்சியை 4.2 விழுக்காடாகவும், 2020-21 வளர்ச்சியை 1.9 விழுக்காடாக வும் கணித்துள்ளது. மற்ற நாடுகளில் பூஜ்ஜியத்திற்கும் கீழாக வளர்ச்சி ஏற்படும் சூழல் உள்ள நிலையில் இந்தியாவின் எண்ணிக்கை மோசமில்லை. இருப்பினும் இந்தியா மகிழ்ச்சி கொள்ள முடியாது. இந்தியாவின் தீவிர வறுமை பெரும் பாதிப்பை உருவாக்கும். வாரக்கடன் சுமை இந்திய பொருளாதாரத்தில் பெருமளவில் அழுத்தம் கொடுக்கிறது.

கரோனா பாதிப்பு வெள்ளம், பூகம்பம் ஆகிய இயற்கை பேரிடரைப் போல உள்கட்டமைப்பை பாதிப்பினை ஏற்படுத்தவில்லை. எனவே இந்நோய் வெளியேறியதும் மீண்டு வளருவோம் என்ற நம்பிக்கை நிச்சயம் உண்டு.

பல நாடுகள் அறிவித்துள்ள நிதிச்சலுகையை ஒப்பிடுகையில் இந்தியா வெளியிட்டுள்ள நிதிச்சலுகைக் குறித்து தங்களின் கருத்து?

இந்தியாவின் 85 விழுக்காடு வேலைவாய்ப்பு முறைசார பணிகளைச் சார்ந்தது. லாக்டவுன் தீவிரத்தை ஒப்பிடுகையில் அரசு அறிவித்துள்ள நிதிச் சலுகை மிகக் குறைவு. இருப்பினும் தற்போதைய நிதிப்பற்றாகுறை அளவை மனதில் வைத்துதான் அரசு மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும்.

கூடுதல் நிதிச் சுமை விலைவாசி உயர்வு, முதலீடுகள் ஆகியவற்றில் சிக்கலை ஏற்படுத்தலாம். எனவே, அரசு அடுத்த இரண்டு மூன்று ஆண்டுகளில் நிதிச்சிக்கலை சீரமைக்க முடியும் என்ற நம்பிக்கையுடன் தனது நிதிச்சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

லாக்டவுனுக்குப்பின் நாம் மேற்கொள்ள வேண்டிய முக்கிய நடவடிக்கைகள் என்ன?

ரிசர்வ் வங்கியின் தற்போதைய பணப்புழக்க அதிகரிப்பு, இஎம்ஐ அறிவிப்புகள் மட்டும் பொருளாதார சீரமைப்புக்கு போதாது. ரியல் எஸ்டேட் தொழில் மேம்படும் வகையில் முக்கிய முன்னெடுப்புகளை அரசு மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்து பெரு நிறுவனங்களுக்கு நிதிகளை அரசு ஒதுக்கீடு செய்து, அவை மூலம் சிறுகுறு தொழில்கள் தழைக்க வழிவகைச் செய்ய வேண்டும். 2008ஆம் ஆண்டு மந்தநிலைக்குப்பின் அமெரிக்கா அறிவித்த பொருளாதார சிறப்பு நிதிச்சலுகை போல இந்திய அரசும் லாக்டவுனுக்குப் பின் முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஹெலிக்காப்டர் பணம் குறித்து உங்கள் பார்வை?

ஹெலிக்காப்டர் பணம் என்பது அரசின் வழிகாட்டுதல் படி ரிசர்வ் வங்கி புதிதாக கூடுதல் நோட்டுகள் அச்சடித்து மக்கள் நலத்திட்டத்திற்கு அரசு வழங்கும் தொகை அரசுக்கு கடனாக மாறாது. இதன் மூலம் பொது செலவீனம் அதிகரித்து கூடுதல் நிதிப்புழக்கம் நடைபெறும். ஆனால் இந்தியா இத்தகைய முடிவை எடுக்க வாய்ப்புகள் குறைவு. ஹெலிக்காப்டர் பணம் அச்சடிக்கும் பட்சத்தில் விலைவாசி கட்டுக்கடங்காத உயர்வைச் சந்திக்கும்.

குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சிக்கலை எவ்வாறு அரசு எதிர்கொள்ள வேண்டும்

குடிபெயர்ந்த தொழிலாளர்கள் நமது பொருளாதாரத்தின் முக்கிய தூண்கள். இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலம் புலம் பெயர்ந்து தொழில் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும். இந்தச் சிக்கலை அரசு அவ்வளவு எளிதாக தீர்த்துவிட முடியாது. இருப்பினும் அவர்களுக்கு அடிப்படை வசதிகள், சுகாதார நலன்களை அரசு ஏற்படுத்தித்தர வேண்டும்.

2008ஆம் ஆண்டு மந்தநிலையுடன் தற்போதைய நிலை எவ்வாறு ஒப்பிடுகின்றீர்கள்?

2008ஆம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை நிதித்துறையின் மூலம் தொடங்கியதாகும். வங்கிகள், நிதி நிறுவனங்கள் மூலம் தொடங்கிய இந்த சரிவு மக்களின் வளம், சேமிப்பை பாதித்து, மற்ற பொருளாதார துறைகளை பாதித்தது.

கரோனா பாதிப்பானது தலைகீழானது; நேரடி பொருளாதார பாதிப்பாக மக்களிடமிருந்து நிதித்துறைக்கு செல்லும். எனவே, இரண்டும் அடிப்படையில் தலைகீழ்மாற்றத்தைக் கொண்டது.

அதேபோல், 2008ஆம் ஆண்டு பொருளாதார பாதிப்பு அமெரிக்காவில் தொடங்கி மற்ற நாடுகளில் தொடர் தாக்கங்களை ஏற்படுத்தியது. ஆனால் கரோனா மற்றொரு பொருளாதார பெருஞ்சக்தியான சீனாவில் தொடங்கி உலக நாடுகளில் தாக்கம் ஏற்படுத்திவருகிறது.

இதையும் படிங்க:'தமிழ்நாட்டிற்கு ரூ.45 ஆயிரம் கோடி பாக்கி; வழங்குமா மத்திய அரசு?' - பேராசிரியர் ஜோதி சிவஞானம் பதில்

Last Updated : Apr 26, 2020, 2:30 PM IST

ABOUT THE AUTHOR

...view details