கோவிட்-19 பரவல் காரணமாக உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார பாதிப்புகள் குறித்து உலக வங்கி ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, தெற்காசிய நாடுகள் குறித்து விரிவான ஆய்வை சர்வதேச நிதியத்துடன் இணைந்து உலக வங்கி மேற்கொண்டுள்ளது.
அதன்படி, நடப்பு நிதியாண்டில் தெற்காசிய பிராந்திய நாடுகளில் சுமார் 7.7 விழுக்காடு ஜிடிபி சரிவைச் சந்திக்கும் எனவும் அதிலும் இந்தியா 9.6 விழுக்காடு ஜிடிபி சரிவைச் சந்திக்கும் எனவும் ஆய்வுத் தகவல் தெரிவிக்கின்றது.
இது குறித்து உலக வங்கி தலைமை பொருளாதார நிபுணர் ஹான்ஸ் டிம்மர் கூறுகையில், இந்தியாவின் பொருளாதார சூழல் முன்னெப்போதும் இல்லாத மிக மோசமான சூழலில் உள்ளது. இது மிகவும் கவலையளிக்கும் நிலைக்கு கொண்டுசெல்லும் என எச்சரித்துள்ளார்.
கோவிட்-19 பரவலைத் தடுக்க பிரதமர் நரேந்திர மோடி நாடு முழுவதும் லாக்டவுன் அறிவித்த நிலையில், இதன் தாக்கம் நேரடியாக பொருளாதார முடக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது தளர்வுகள் மெல்ல அறிவிக்கப்படும் நிலையில், மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப காலம் பிடிக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க:கரோனா காலத்திலும் சிறப்பாக செயல்படும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்