உலகளாவிய திறனுடன் வங்கிகளை மேம்படுத்தினால் மட்டுமே, இந்தியாவின் இலக்கான ஐந்து டிரில்லியன் டாலர்கள் பொருளாதாரத்தை 2024-25க்குள் எட்டிவிட முடியும் என, தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
பந்தன் வங்கியின் ஐந்தாவது ஆண்டு விழாவில் பேசிய அவர்,“உலக அளவில் பெரும் வங்கிகள் பட்டியலில் ஒரே ஒரு இடத்தை தான் இந்திய வங்கி பூர்த்தி செய்துள்ளது. அதே நேரத்தில் இந்தியாவைவிட சிறிய நாடுகள் அதிக இடத்தை தக்கவைத்துக் கொண்டுள்ளன. இந்தப் பட்டியலில் 55ஆவது இடத்தில் ஸ்டேட் வங்கி பெற்றுள்ளது.
மீண்டும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கும் பொதுத்துறை வங்கிகள்!
இந்த முதல் 100 பட்டியலில் சீன நாட்டின் 18 வங்கிகளும், அமெரிக்காவின் 12 வங்கிகளும் இடம்பெற்றுள்ளன. பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியா, ஒரே ஒரு இடத்தையே பிடித்திருக்கும் நிலையில், 15ஆவது இடத்திலுள்ள தென் கொரிய நாட்டின் ஆறு வங்கிகள், இந்தப்பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
நம்மில் ஆறில் ஒரு பங்கு பொருளாதாரம் வைத்திருக்கும் ஸ்வீடன், எட்டில் ஒரு பங்கு பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள வங்கிகள் தலா 3 இடங்களைப் பிடித்துள்ளன. இந்தியாவின் அளவில் ஒரு சிறு பகுதி அளவுள்ள நாடுகளான பின்லாந்து, டென்மார்க், பெல்ஜியம், ஆஸ்திரியா, நோர்வே ஆகியவை கூட இந்தப் பட்டியலில் குறைந்தது ஒரு வங்கியைக் கொண்டிருக்கின்றன” என்றார்.
ஜிஎஸ்டி மூலம் வரிகள் குறைக்கப்பட்டதன் விளைவாக, வரி செலுத்துவோர் எண்ணிக்கை அதிகரிப்பு!
மேலும், ”இந்தியாவின் அளவை ஒப்பிட்டுப் பார்க்கையில், பெரும் அளவிலான வங்கிகள் நம் நாட்டுக்கு தேவைப்படுகின்றன. வங்கிகள் அனைத்தும் போட்டியின் அடிப்படையில் பயனாளிகளுக்கு சலுகைகளை வழங்குவதன் மூலம் அதிக அளவிலான பண உள்ளீடுகளைப் பெற முடியும்” என்றும் கூறிய அவர், இதன் மூலம் வலுவான வங்கிகளைக் கட்டமைக்க முடியும் என்றும் தெரிவித்தார்.