கரோனா பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் இந்தியப் பொருளாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பொருளாதாரத்தை மீட்டெடுக்க ரூ. 20 லட்சம் கோடி மதிப்பிலான பொருளாதார ஊக்குவிப்பு திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார்.
மேலும், கடந்த சில வாரங்களில் மட்டும் கூகுள் போன்ற பல்வேறு முக்கிய நிறுவனங்களும் இந்தியாவில் 20 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்யவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 40 மில்லியன் அமெரிக்க டாலர்களை பல்வேறு நிறுவனங்களும் முதலீடு செய்யவுள்ளதாக உறுதியளித்துள்ளது.
பேஸ்புக், கூகுள், குவால்காம் போன்ற நிறுவனங்கள் சமீப நாள்களில் மேற்கொண்டுள்ள அந்நிய நேரடி முதலீடு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சர்வதேச நிதியத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் ஜெர்ரி ரைஸ், "கடந்ச சில ஆண்டுகளாகவே இந்தியாவில், வணிகச் சூழலை வலுப்படுத்தவும், வர்த்தகத்தில் முதலீட்டை ஊக்குவிக்கவும் ஒருங்கிணைந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கைகள் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பொருளாதார பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன. இது தொடர்பாக புதிய திவால் சட்டம், ஜிஎஸ்டி உள்ளிட்டவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவை வணிக தரவரிசையில் இந்தியா முன்னேற உதவியது. தொழில் தொடங்க ஏதுவான நாடுகள் குறித்து உலக வங்கி வெளியிடும் தரவரிசையில் 2018ஆம் ஆண்டு 100ஆவது இடத்தில் இருந்த இந்தியா 2020ஆம் ஆண்டு 63ஆவது இடத்திற்கு முன்னேறியது.