கரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ளும் முக்கிய கட்டத்தை இந்தியா தற்போது எட்டியுள்ளது. வரலாறு காணாத வகையில் 130 கோடி இந்திய மக்களை சுமார் 40 நாட்கள் முடக்கிபோட்டுள்ளது லாக்டவுன் அறிவிப்பு.
பிரதமர் மோடியின் அறிவிப்பின்படி இத்தகைய சவாலான சூழலில் வரும் நாட்களில் முக்கிய சேவைகள் மட்டும் இயங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. லாக்டவுன் அறிவிப்பின் போது இந்தியாவின் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 523ஆக இருந்த நிலையில், தற்போது அது 14 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
மத்திய அரசின் கூற்றின்படி லாக்டவுன் அறிவிப்பின் மூலம் நோய் தீவிரம் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டு, சுகாதார சிக்கல் தற்போதைய சூழலில் தடுக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் அதிக எண்ணிக்கை கொண்டிருந்த மாநிலமான கேரளாவில், வைரஸ் வெகுவாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாகாராஷ்டிரா, டெல்லி, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளது கவலைக்குரியதாகும். வைரஸ் பாதிப்பை முறியடிக்கும் விதமாக மாநில அரசுகள் வைரஸ் தீவிரமாக உள்ள பகுதிகளை கண்டறிந்து கடும் சோதனைகளை மேற்கொண்டுவருகின்றன.
மாநில முதலமைச்சர்களுடன் காணொலிகாட்சி மூலம் நடத்திய ஆலோசனையில் தங்கள் கருத்துகளை முன்வைத்துள்ளனர். அனைத்து மாநில முதலமைச்சர்களும் லாக்டவுன் அறிவிப்பை நீட்டிக்க ஆதரவு தெரித்த நிலையில், நிதி விவகாரம் குறித்தும் முக்கிய கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர். லாக்டவுன் அறிவிப்பால் வாழ்வாதாரத்தை இழந்துதவிக்கும் ஏழை மக்களை பாதுகாக்க பிரதமர் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது அனைவரின் கோரிக்கையாக உள்ளது.