ஹைதராபாத்:வரிதளத்தை விரிவுபடுத்தும் நோக்கில், நகை கொள்முதல், பெரு வணிக பரிமாற்றம், வெளிநாட்டு பயணம் அல்லது மின்சார நுகர்வு போன்ற தனிநபர்களால் அதிகம் செய்யப்படும் செலவுகளை பதிவு செய்து, பண பரிவர்த்தனை அறிக்கையில் (எஸ்.எஃப்.டி) சேர்க்க மத்திய நிதித் துறை உத்தரவிட்டுள்ளது.
எஸ்.எஃப்.டி என்பது பொதுவாக, பெரு நிறுவனங்களுக்கும், வணிக நிறுவனங்களுக்கும் செயல்படுத்தப்பட்டுள்ள கண்காணிப்பு பதிவேடாகும். தற்போது இதில் தனிநபரின் பெரும் செலவுகள் பதிவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது, எஸ்.எஃப்.டி இன் கீழ் போடப்படும் அறிக்கையில் முக்கியமாக அதிக தொகையுள்ள பண பரிவர்த்தனைகள் அல்லது பங்குகள் மற்றும் பத்திரங்களில் மேற்கொள்ளப்படும் பெரிய முதலீடு ஆகியவற்றை உள்ளடங்கியிருக்கும். ஆனால் வரி ஏய்ப்பைக் கட்டுக்குள் வைத்திருக்க, அதிக மதிப்புள்ள தனிநபர் பரிவர்த்தனைகளை உள்ளடக்குவது மட்டுமல்லாமல், தற்போதுள்ள பரிவர்த்தனைகளின் போக்குகளையும் கண்காணிக்க அரசாங்கம் இந்த திட்டம் வகுத்துள்ளது
தற்போது வகுக்கப்பட்டுள்ள புதிய பதிவு திட்டத்தில், ஒரு லட்ச ரூபாய்க்கு மேல் தனிநபர் வாங்கும் நகைகள், மின்னணு பொருள்கள் ஆகியவை பதிவுசெய்யப்படும். பொருள்களை வாங்குவோர், அதன் தொகையை கடன் அட்டை, பணம், மின்னணு பரிவர்த்தனை என எந்த முறையில் செலுத்தியிருந்தாலும், அது பண பரிவர்த்தனை அறிக்கையில் பதிவேற்றப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல், ஆண்டுக்கு ரூ. 20,000க்கு மேல் சொத்துவரி செலுத்துதல், ஆயுள் காப்பீட்டு தொகை ரூ. 50,000க்கு மேல் செலுத்துதல், உங்கள் டிமேட் கணக்கில் பங்கு பரிவர்த்தனைகள், நடப்புக் கணக்கில் ரூ. 50 லட்சத்துக்கு மேல் வைப்பு / வரவு போன்ற பரிவர்த்தனைகள் எஸ்.எஃப்.டி அறிக்கையில் சேர்க்கப்படவுள்ளது.
இவ்வாறு பதிவேற்றப்பட்ட கணக்குகள் ஆராயப்பட்டு, வரி ஏய்ப்பு செய்திருந்தால் அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதற்கு முன் இக்கணக்குகள் வெளிப்படையான வரிவிலக்கு திட்டத்தை பயன்படுத்தி, வரியைச் செலுத்த வலியுறுத்தப்படும் என்று நிதி அமைச்சகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.