இந்தியாவில் லாரி, பேருந்து டயர் உற்பத்தியாளர்களின் நலன்களைக் காக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று வர்த்தகத் துறை அமைச்சகம் தனது பரிந்துரையில் கூறியுள்ளது. சீனாவில் இருந்து அதிக அளவில் இறக்குமதி செய்யப்படும் டயர்களால் உள்நாட்டில் அப்பொருள்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் பாதிப்படைவதாக இந்திய டயர் தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு புகார் அளித்தது.
இதனை மத்திய வர்த்தக அமைச்சகத்தின் வர்த்தக விவகாரங்கள் குறைதீர்ப்பு இயக்குநரகம் விசாரித்தது. முடிவில், லாரி, பேருந்துகளுக்கான டயர்களை சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதைக் குறைக்க வேண்டும். இதற்காக அந்த டயர்கள் மீது மட்டும் மிகை இறக்குமதி தடுப்பு வரியை விதிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த வரி விதிக்கப்படும்போது, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் அந்த வகை டயர்களுக்கு மட்டும் அதிக வரி விதிக்கப்படும். இதன் மூலம் அவற்றின் விலை, உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அதேவகை டயரின் விலையை விட அதிகரிக்கும். எனவே, இந்தியாவில் உள்ள இறக்குமதியாளர்கள் யாரும் சீன டயர்களை இறக்குமதி செய்யமாட்டார்கள்.