டெல்லி, மும்பை, பெங்களூரு, கொல்கத்தா, பாட்னா உள்ளிட்ட நகரங்களிலிருந்து விமானம் கிடைக்காத காரணத்தாலும் போதுமான விமான கட்டுப்பாட்டு அறை குழுவினரிடமிருந்து தகவல்கள் கிடைக்காததாலும் 18 உள்நாட்டு விமானங்களை கோ ஏர் நிறுவனம் ரத்து செய்துள்ளதாக அந்நிறுவன வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஏன் ரத்து?
இதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டுள்ளன. குறிப்பாக காலநிலை, என்ஜின் குறைபாடுகள் தொடர்பான பிரச்னைகளே பிரதான காரணமாக அந்நிறுவனத்தினர் தெரிவிக்கின்றனர். ஏ 320 நியோ, இதுபோன்ற சில விமானங்களுக்கு சரியான சமிக்ஞை (சிக்னல்) கிடைக்காததால் மும்பை, கோவா, பெங்களூரு, டெல்லி, ஸ்ரீநகர், ஜம்மு, பாட்னா, இந்தூர், கொல்கத்தா ஆகிய நகரங்களுக்குச் செல்லும் 18 விமானங்களை திங்கள்கிழமை (டிச.23) கோ ஏர் ரத்து செய்துள்ளது.
சேவையை முடக்கிய சிஏஏ...!
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) எதிரான போராட்டங்களும் இடர்பாடுகளுக்கு காரணமாகக் கூறப்படுகிறது. விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறித்தும் இதனால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்த பயணி ஒருவர், “கோ ஏர் அதிகாலை 1.43 மணிக்கு எனக்கு குறுஞ்செய்தி அனுப்பியது. அதனை அதிகாலை 4.55 மணிக்கு பார்த்தபோது அதில், விமானம் ரத்து செய்யப்பட்டதாக இருந்தது. இதுதொடர்பாக விமானத்தின் அழைப்புதவி எண்களைத் தொடர்புகொண்டேன். எனினும் யாரும் பதிலளிக்கவில்லை” எனப் புகாரளித்துள்ளார்.
மாற்று விமானம்?
இது தொடர்பான கேள்விக்கு பதிலளித்துள்ள விமான செய்தித் தொடர்பாளர், “பயணிகளுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளோம். பாதிப்பைக் குறைக்க மாற்று விமான ஏற்பாடுகள் குறித்து ஆராயப்படுகின்றன. பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இலவச ரத்து, மறு முன்பதிவு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன” என்றார்.
இதையும் படிங்க : மும்பை விமானம் 8 மணிநேரம் தாமதம் - பயணிகள் கடும் அவதி