மத்திய வரியிலிருந்து ஏப்ரல் மாதத்திற்கான மாநில அரசுகளின் பகிர்வு நிதிக்கான பங்கில் 46,038 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கரோனா தொற்றால் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையை திறம்பட மாநில அரசுகள் கையாள இந்த நிதி பகிர்ந்து அளிக்கப்படுவதாக இது குறித்து வெளியிட்டுள்ள ட்வீட்டில் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. முன்னதாக மத்திய அரசின் வரவு-செலவுத் திட்ட அறிக்கையில் 2020 - 21ஆம் ஆண்டிற்கான மாநில அரசுகளின் பங்கு 7.84 லட்சம் கோடியாகக் கணக்கிடப்பட்டிருந்தது.
மேலும் இதில் 41 விழுக்காடு மாநிலங்களின் பகிர்வுத் தொகையாகவும், 1 விழுக்காடு புதிதாகப் பிரிக்கப்பட்ட யூனியன் பிரதேசங்களான ஜம்மு, காஷ்மீர், லடாக்கிற்கான தொகையாகவும் 15ஆவது நிதி ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால் 14ஆவது நிதி ஆணையத்தில் மாநிலங்களுக்கு 42 விழுக்காட்டுத் தொகையை பகிர்ந்தளிக்கும்படி பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
மாநில அரசுகளின் பகிர்வு நிதி தற்போது மாநில அரசுகளின் பங்கில் 48,038 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், இந்தத் தொகையை 15ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரைகளின்படி பகிர்ந்துகொள்ளுமாறும் தனது ட்வீட்டில் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது,
இதையும் படிங்க:நிதிப் பிரச்னை குறித்து மாநில நிதி அமைச்சர்களுடன் நிர்மலா ஆலோசனை