தேசிய பணமாக்கல் திட்டத்தை நிர்மலா சீதாராமன் நேற்று (ஆகஸ்ட் 23) அறிமுகம் செய்துவைத்தார். இந்தத் திட்டத்தின்கீழ் 2022ஆம் ஆண்டுமுதல் 2025ஆம் ஆண்டுக்குள் ஆறு லட்சம் கோடி ரூபாய் நிதித் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
இந்த அறிமுக விழாவில் நிதி ஆயோக் தலைமைச் செயல் அலுவலர் அமிதாப் கந்த், நிதி ஆயோக் துணைத் தலைவர் ராஜீவ் குமார் ஆகியோர் பங்கேற்றனர்.
தேசிய பணமாக்கல் திட்டம் என்றால் என்ன
அரசு உடமைகளில் தனியார் முதலீட்டின் மூலம் நிதித் திரட்டி, புதிய உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் அரசு நிறுவனங்கள், அரசு சார் பொதுத்துறை நிறுவனங்கள், அரசின் சொத்துகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குத் தனியாரிடம் ஒப்படைத்து அதன்மூலம் அரசு நிதித் திரட்டவுள்ளது.
அரசு-தனியார் கூட்டமைப்பாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தில் அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் குத்தகை முறையில் குறிப்பிட்ட காலத்திற்கே தனியாரிடம் இருக்கும் எனவும், இந்தத் திட்டத்தின்கீழ் எந்த நிறுவனத்தையும் அரசு விற்காது என நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
ரூ.6 லட்சம் கோடி இலக்கு
இந்த தேசிய பணமாக்கல் திட்டத்தின் மூலம் நான்கு ஆண்டுகளில் சுமார் ஆறு லட்சம் கோடி ரூபாய் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது. அதிகபட்சமாக சாலை, ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பின் மூலம் முறையே ரூ.1.6 லட்சம் கோடி, ரூ.1.5 லட்சம் கோடி திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
அடுத்தபடியாக மின் பகிர்மான துறையில் 45 ஆயிரத்து 200 கோடி ரூபாயும், மின் உற்பத்தியில் 24 ஆயிரத்து 462 கோடியும் திரட்ட அரசு திட்டமிட்டுள்ளது.
புரிதலுக்கு எளிய உதாரணம்
தற்போதை நிலையில், தேசிய நெடுஞ்சாலைகளின் பராமரிப்பை குறிப்பிட்ட காலத்திற்கு அரசு தனியார் வசம் ஒப்படைத்துள்ளது. சாலைகளின் சுங்க வசூலை தனியார் மேற்கொள்கிறது.
அதில் ஒரு பங்குத் தொகை அரசுக்கு வருவாயாக கிடைக்கிறது. அதேவேளை, அதைப் பராமரிக்க வேண்டிய செலவும் பொறுப்பும் அரசுக்கு இல்லை. சாலைகளின் உரிமையும் அரசின் வசமே உள்ளது. இவ்வாறு அரசு தனது சொத்துகளின் மூலம் வருவாயைப் பெருக்கி அதைப் பராமரிக்கும் செலவினங்களைக் குறைக்கும் அடிப்படையிலேயே இந்தத் தேசிய பணமாக்கல் திட்டம் செயல்பட உள்ளது.
இதையும் படிங்க:தொழில்முனைவோருக்கு ரூ.50 லட்சம் வரை கடன் - பேஸ்புக் புதுத்திட்டம்