மத்திய அரசு 'தற்சார்பு இந்தியா திட்டம்' என்ற பெயரில் சுமார் 20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்குச் சிறப்பு நிதிச்சலுகை அறிவிப்பில், வேளாண்மை மற்றும் ஊரகத் துறை சார்ந்த அறிவிப்புகளும் வெளியாகியுள்ளன. ஆனால் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு இந்த அறிவிப்புகள் முக்கியப் பேசுபொருளாக உருவாகியுள்ளன.
காரணம், வேளாண்மைத் துறைக்கு வழக்கமாக வழங்கப்படும் சலுகைகளான கடன், தள்ளுபடி, மானியம் ஆகியவை மட்டும் இல்லாமல் இந்த அறிவிப்புகளில் கொள்கைரீதியான முக்கிய மாற்றங்களை அரசு வெளியிட்டுள்ளது. குறிப்பாக,
- அத்தியாவசிய பொருள்கள் சட்டத்திருத்தம்,
- வேளாண்மை உற்பத்தி சந்தைக்குழுச் சட்டத் திருத்தம் (Agricultural Produce Market Committee Act). [அதாவது ஒழுங்குமுறை விற்பனை நிலையங்கள் கட்டணம் வசூலிப்பதை ஒழுங்குபடுத்தும் சட்டத்திருத்தம்]
- ஒப்பந்த வேளாண்மை (இது சட்டத்திருத்தமல்ல... சீர்த்திருத்தம்)
ஆகியவை பெரும் மாற்றத்திற்கான அறிவிப்புகள் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வேளாண் பொருளாதார வல்லுநர் பேராசிரியர் வெங்கடேஷ் பாலசுந்தரம் ஆத்ரேயாவுடன் நமது ஈடிவி பாரத் நடத்திய சிறப்பு நேர்காணலில் நாம் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் விரிவான விளக்கம் அளித்துள்ளார். நாம் எழுப்பிய கேள்விகளும் அவர் அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி: அரசு அறிவித்துள்ள இந்த மூன்று அறிவிப்புகள் விவசாயிகளின் வாழ்வாதாரத்தில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களை ஏற்படுத்துமா?
இந்த மூன்றும் முற்றிலும் புதிதான முன்னெடுப்புகள் அல்ல; இவை அனைத்தும் பல ஆண்டுகளாக விவாதிக்கப்பட்டுவருகின்றன. பல இடங்களில் இந்தச் சட்டங்களில் மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. முதலில் இந்த மூன்று அறிவிப்புகள் குறித்தும் நமக்குத் தெளிவான புரிதல் அவசியம். முதலாவதாக, அத்தியாவசிய பொருள்கள் சட்டம் என்பது மிக முக்கியமான பண்டங்களை தனியார் பெரு வியாபாரிகள், நிறுவனங்கள் பதுக்கிவைப்பதைத் தடுக்கவே உருவாக்கப்பட்டது. இது போர்க்காலத்தில் உருவாக்கப்பட்ட சட்டம். தற்போதைய சூழலுக்கு இது தேவையில்லை என்று பலர் கூறுகின்றனர். இதிலிருந்து நான் மாறுபடுகிறேன்.
காரணம், இந்தியா போன்ற நாடுகளில் தேவைக்கும், உற்பத்திக்கும் இடையே மெல்லிய இடைவெளிதான் உள்ளது என்பதால் தேவையில் சிறிய மாற்றம் ஏற்பட்டாலும் விலைவாசியில் அது பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவிடும். அதேபோல், நுகர்வோர் என்கிறபோது அதில் விவசாயிகளும் அடங்குவார்கள். விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருள்களைச் சந்தையில் விற்று, தனது தேவைக்கேற்ப பின்னர் நுகர்வு செய்கின்றனர். எனவே, இந்த விலைவாசியின் தாக்கம் அவர்களையும் பாதிக்கும்.
கேள்வி: 1950, 60-களில் இந்தச் சட்டம் உருவாக்கப்பட்டபோது இந்தியா உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெறாமல் இருந்தது. உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற இந்தச் சூழலில், சட்டத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டியது அவசியம்தானே?
இதுபோன்ற கோரிக்கைகள் விவசாயிகளிடமிருந்து வருவதில்லை. தனியார் பன்னாட்டுப் பெருநிறுவனங்கள் சார்பில்தான் இதுபோன்ற கருத்துகள் முன்வைக்கப்படுகின்றன. தற்போது இந்தியா உணவுத் தன்னிறைவு பெற்று சுமார் 7 கோடி டன் தானியம் எஃப்.சி.ஐ.இல் அதாவது இந்திய உணவுக் கழகத்தில், உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குக் காரணம், மக்களின் வாழ்வாதாரத்துக்கு ஏற்றவாறு எளிய மக்களுக்கு பொது விநியோகத் திட்டத்தை செயல்படுத்தவே அரசு உணவு தானியங்களைக் கொள்முதல் செய்யும் முறையை உருவாக்கியதே ஆகும்.
2008, 2010ஆம் ஆண்டுகளில் நகர்ப்புற, கிராமப்புற உணவுப் பாதுகாப்பின்மை குறித்த ஆய்வு ஒன்றை நடத்தி அது தொடர்பாக இரு புத்தகங்கள் எழுதி ஐ.நா. சபையின் WSP திட்டத்தின்கீழ் முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆய்வின்போது நாங்கள் உணர்ந்த விஷயம் என்னவென்றால், இந்த இலக்குசார் பொது விநியோகமுறை என்பது ஏழை மக்களின் வாங்கும் திறனைக் கணக்கில் கொள்ளாமல் நிலையை மேலும் சிக்கலாக்கியுள்ளது. உதாரணமாக ஆந்திராவை அரிசி உற்பத்தியில் உபரி மாநிலமாகக் கூறுவோம். அதற்காக ஆந்திரப் பிரதேசத்தில் அனைவரும் உணவில் தன்னிறைவு பெற்றுவிட்டதாகப் பொருள் அல்ல.
எனவே, கிடங்கில் உணவு தானியம் குவிந்துள்ளது மக்களுக்கான பொது விநியோகம் முறையாகச் சென்று சேரவில்லை என்பதைக் குறிக்குமே தவிர உணவு உற்பத்தியில் முழுமையாகத் தன்னிறைவு பெற்றதாகக் கருதிவிடக் கூடாது. மேலும், வேளாண்மை என்பது பருவநிலை சார்ந்து இயங்கக்கூடியது என்பதால் இதில் உள்ள நிலையற்றத் தன்மையை நாம் மறந்துவிடக் கூடாது. பருவநிலை மாற்றம் காலத்தில் ஒரு டிகிரி வெப்பம் அதிகரிப்பதாலும் உற்பத்தியில் குறைவு ஏற்படும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். உணவு போன்ற அத்தியாவசிய விஷயத்தில் தன்னிறைவு பெற்றுவிட்டோம் என்று கருதும் அலட்சியப்போக்கு ஆபத்தானது. எனவே, அத்தியாவசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தை காலாவதியானது எனப் புறக்கணிப்பது முறையல்ல.
கேள்வி: விவசாயிகள் தங்கள் உற்பத்திப் பொருள்களை உரிய விலையில் நாடு முழுவதும் சந்தைப்படுத்தும்விதமாக வேளாண்மை உற்பத்தி சந்தைக்குழுச்சட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்?
வேளாண்மை உற்பத்தி சந்தைக்குழுச் சட்டம் மாநிலங்களுக்குக் கீழ் வருகிறது என்பதால் ஏற்கனவே தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்தச் சட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும், பிகார் போன்ற மாநிலங்களில் வேளாண்மை உற்பத்தி சந்தைக்குழுச் சட்டம் என்பதே இல்லை. எனவே, அங்கெல்லாம் விவசாயிகளின் பொருள்கள் முறையாகச் சந்தைப்படுத்தப்பட்டு உரிய விலை கிடைத்துவிட்டதா என்ன? சிக்கல் என்பது வேளாண்மை உற்பத்தி சந்தைக்குழுச் சட்டத்தில் மட்டும் இல்லை.
மேலும், நாட்டின் வேளாண்மைத் துறை என்பது மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்ட ஒன்று. கேரளா போன்ற மாநிலத்தின் விவசாயச் சூழல் மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்குப் பொருந்தாது. எனவே, அந்தந்த மாநிலங்கள் தங்களது சூழலுக்கு ஏற்றாற்போல் இந்தச் சட்டத்தைத் திருத்திக்கொள்வதே சரி. அதை விட்டுவிட்டு, டெல்லியில் இருந்துகொண்டு நாடு முழுவதும் ஒரேவிதமான சட்டத்தை அமல்படுத்துவது என்பது யதார்த்தத்திற்குப் பொருத்தமாக இருக்காது.
கேள்வி: நிலைமை இவ்வாறு இருக்க வேளாண்மை உற்பத்தி சந்தைக்குழுச் சட்டம் உள்ளிட்ட சந்தை முறைகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னெடுப்புகள் என்ன?
இந்திய வேளாண்மைத் துறையில், சுமார் 86 விழுக்காடு விவசாயிகள் சிறு, குறு விவசாயிகள்தான். இவர்கள் சாகுபடிசெய்யும் பரப்பளவு 44 விழுக்காடு மட்டுமே. மீதமுள்ள 14 விழுக்காடு நில உரிமையாளர்கள்தான் 56 விழுக்காடு பரப்பளவில் விவசாயம் செய்கின்றனர். எனவே, சிறு, குறு விவசாயிகள் உற்பத்தி செய்யும் சிறிய அளவிலான பொருள்களை அருகிலேயே சந்தை செய்யும் சூழல் தற்போது இல்லை.