டெல்லி: கோவிட் -19 உலகளாவிய பெருந்தொற்று பாதிப்பு காரணமாக ஏற்பட்ட பொருளாதார மந்தநிலையின் விளைவால் வங்கிகளில் என்பிஏ எனப்படும் செயல்படாத சொத்துக்கள் அல்லது மோசமான கடன்கள் உயர வாய்ப்புள்ளது. இதனால், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டில் ரூ.35,000 முதல் ரூ .40,000 வரை வங்கி மறு மூலதன திட்டத்தை அறிவிப்பார் என்று வங்கியாளர்கள் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும், அரசால் வெளியிடப்பட்ட மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியின் முதல் மதிப்பீட்டின்படி, நடப்பு நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் கிட்டத்தட்ட 8 சதவீதம் வரை சுருங்கக்கூடும்.
இந்நிலையில் கேர் ரேட்டிங்ஸ் (Care Ratings) தலைமை பொருளாதார நிபுணர் மதன் சப்னாவிஸ் கூறுகையில், “பட்ஜெட்டில், வங்கி மறு மூலதனமயமாக்கல் திட்டத்தை நாங்கள் எதிர்பார்க்கிறோம். அதாவது, ரூ.35,000 முதல் ரூ.40,000 கோடி வரை திட்டங்களை எதிர்பார்க்கிறோம்” என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், “வங்கி மறு மூலதனமயமாக்கல் திட்டத்தை அரசாங்கம் எவ்வாறு செயல்படுத்தும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. அரசாங்கம் நேரடி பட்ஜெட் ஆதரவை அறிவிக்கலாம் அல்லது மூலதனத்தை திரட்ட வங்கிகளுக்கு பத்திரங்களை வழங்கலாம்.
தற்போதைய மூலதனமயமாக்கல் முறை சுவாரஸ்யமாக இருக்கும். ஏனெனில், அதிகரித்து வரும் வாராக்கடன்களின் நெருக்கடியை சமாளிக்க பட்ஜெட்டில் வாராக்கடன் வங்கி அமைப்பதை நிதியமைச்சர் அறிவிக்கக்கூடும்.
வாராக்கடன் வங்கி என்பது பிற வங்கிகளின் செயல்படாத சொத்துக்களை ஒருங்கிணைக்கும் ஒரு வங்கி ஆகும். செயல்படாத சொத்துக்களை முன்மொழியப்பட்ட வாராக்கடன் வங்கிக்கு மாற்றுவதன் மூலம் கடன் வங்கிகளின் இருப்புநிலைகளை சுத்தம் செய்ய இது உதவும்” என்றார்.