பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதும் அரசின் வருவாய், செலவு, முதலீடு உள்ளிட்ட நிதி விவரங்கள் கொண்ட நிதி மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதி மசோதா நிறைவேறிய பின்னரே பட்ஜெட் குறித்த நாடாளுமன்ற நடவடிக்கைகள் நிறைவுபெறும்.
இந்நிலையில், மக்களவையில் நேற்று 2019ஆம் ஆண்டிற்கான நிதி மசோதா குறித்த விவாதத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலளித்துப் பேசினார். அப்போது அந்நிய முதலீடுகள், பெரும் பணக்காரர்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் சிறப்பு வரிகள், புதிய நேரடி வரிக்கொள்கை, செய்தித்தாள் அச்சிடப் பயன்படும் காகிதங்களுக்கான இறக்குமதி வரி உயர்வு போன்ற அம்சங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டு விவாதிக்கப்பட்டது.