நாடு முழுவதும் கரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களிலும் லாக்டவுன் என்ற முழு முடக்கம் அமலில் உள்ளது. இதன் காரணமாக அனைத்துத் துறைகளும் முற்றிலுமாக முடக்கப்பட்டு, அத்தியாவசிய துறைகளான சுகாதாரத் துறை, காவல் துறை உள்ளிட்டவை மட்டுமே செயல்பட்டுவரும் நிலையில் நாட்டின் பொருளாதாரம் இதன் காரணமாக கடும் பாதிப்பிற்குள்ளாகியுள்ளது.
பொருளாதார பாதிப்பை எதிர்கொள்ள சிறப்புப் பொருளாதார நடவடிக்கைக் குழு அமைக்கப்படும் எனப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்தார். ஆனால் அறிவித்து இத்தனை நாள்களாகியும் அரசுத் தரப்பு முன்னெடுப்புப் பற்றி எந்தத் தகவலும் அளிக்காதது பெரும் அதிர்ச்சியைத் தருகிறது எனவும் மத்திய அரசு பொருளாதார அழிவைக் கட்டுப்படுத்த விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மத்திய முன்னாள்அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரித்திருந்தார்.