கச்சா எண்ணெயும் உலகப் பொருளாதாரமும்:
கச்சா எண்ணெய் பிரச்னையை சாதுரியமாகக் கையாளும் சீனா! - oil import
உலகச் சந்தையில் நிலவும் கச்சா எண்ணை இறக்குமதி பிரச்னையை எலக்ட்ரிக் பேருந்துகள் மூலம் சாதுரியமாகச் சமாளித்து வருகிறது.
உலகப் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் முக்கியக் காரணியாகத் திகழ்வது கச்சா எண்ணெய் வர்த்தகம். அரபு மற்றும் வளைகுடா நாடுகள், ஈரான், வெனிசுலா போன்ற பல்வேறு நாடுகளிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்கின்ற நாடுகளின் பண மதிப்பே அவை மேற்கொள்ளும் கச்சா எண்ணை வர்த்தகத்தைப் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது. கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் மேற்கண்ட நாடுகளில் ஏதாவது பிரச்னை உருவானால் உலகப்பொருளாதாரத்திலேயே ஸ்திரமற்ற தன்மை ஏற்படும். அதிகளவில் கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடான வெனிசுலாவில் அண்மையில் ஏற்பட்ட உள்நாட்டுச் சிக்கல் காரணமாக இந்தியா அந்நாட்டிடம்எண்ணெய் வாங்கக்கூடாது என அமெரிக்கா நிபந்தனை விதித்தது. இந்தியாவும் அதை ஏற்றுக்கொண்டது. அதற்கு முந்தைய மாதம் வரை வெனிசுலாவிடம் இருந்து அதிகளவிலான எண்ணெய் இறக்குமதி மேற்கொண்ட நாடு இந்தியாதான். வெனிசுலாவுக்கு ஆதரவாக ரஷ்யா, சீனா நாடுகள் உள்ளதால் இந்த சிக்கல் உலகப்பொருளாதாரத்தில் எதிரொலிக்கிறது.
சீனாவின் சாமர்த்தியம்:
மாற்று எரிசக்தி கொள்கைகள் கடந்த சில ஆண்டுகளாக ஆழமாக விவாதிக்கப்படும் கருப்பொருளாக மாறி வருகிறது. எண்ணெய்க்கு பதிலாக மின்சார வாகனங்களைப் பயன்படுத்தும் திட்டங்களைப் பல நாடுகள் முன்னெடுத்து வருகின்றன. உலகின் மிகப்பெரியப் பொருளாதார சக்தியான சீனா, மின்சார வாகன உற்பத்தியில் வேகமான பாய்ச்சலை நிகழ்த்தி வருகிறது. மின்சாரக் கார்களை விட மின்சாரப் பேருந்துகளையே அதிகமாக உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது சீனா. அதிகப் பயனாளிகளைக் கொண்ட பேருந்து போக்குவரத்திற்கு மின்சார பேருந்துகளை உபயோகிப்பதன் மூலம் நாளொன்றுக்கு 2 லட்சத்து 70 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் தேவையைக் குறைக்கவுள்ளது. அதிக மக்கள்தொகைக் கொண்ட நாடான சீனா, இதன் மூலம் பொருளாதாரத்தைப் பலப்படுத்தவே இந்த நடவடிக்கையைத் துரிதப்படுத்தியுள்ளது. குறிப்பாக மற்ற நாடுகளால் ஏற்படும் உலகப் பொருளாதார பாதிப்பின் தாக்கம் தன்னை சீண்டாமல் பாதுகாக்கவே இந்த சாதுரியத் திட்டத்தை முன்னெடுத்துள்ளது சீனா.