கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி (Left Democratic Front) கூட்டணி ஆட்சி நடக்கிறது. முதலமைச்சராக பினராயி விஜயன் உள்ளார்.
இடதுசாரி தலைவர்கள் தாங்கள் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் மாவட்ட கூட்டுறவு வங்கிகளை ஒன்றிணைத்து கேரள வங்கி தொடங்கப்படும் என வாக்குறுதி அளித்து இருந்தனர். மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி ஆட்சிக்கு வந்ததும், பினராயி விஜயன் கேரள வங்கி அமைக்கும் பணிகளை தொடங்கினார்.
இதற்கு எதிர்க்கட்சியான காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மாவட்ட கூட்டுறவு வங்கிகளை இணைக்கும்பட்சத்தில் அது வளர்ச்சியை பாதிக்கும், வாடிக்கையாளர்களும் பாதிக்கப்படுவார்கள் என அக்கட்சி தலைவர்கள் பரப்புரை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கேரள வங்கிக்கு எதிராக திருவனந்தபுரம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நவ. 29ஆம் தேதி தள்ளுபடி ஆனது. அதையடுத்து கேரள வங்கி அமைக்கும் பணிகள் விறுவிறுப்புடன் நடந்தது. இந்த நிலையில் நேற்று கேரள வங்கி தொடர்பான அறிவிப்பை பினராயி விஜயன் முறைப்படி அறிவித்தார். திருவனந்தபுரத்தில் நடந்த விழாவில் இந்த அறிவிப்பு வெளியானது.