பிரதமர் மோடி இரண்டாவது முறையாக ஆட்சியமைத்த பின் இன்று மத்திய அரசின் முதல் பட்ஜெட் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் உரையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதில் குறிப்பாக நாட்டின் முதுகெலும்பாக திகழும் விவசாயத்திற்கும் சில அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.
விவசாயிகளின் வாழ்வில் ஒளியேற்றியதா மத்திய பட்ஜெட்!
டெல்லி: 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை இருமடங்காக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில் தெரிவித்துள்ளார்.
அதன்படி, முதலீடு இல்லாமல் விவசாயம் செய்வது தொடர்பான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இயற்கை உரங்களை பயன்படுத்தி இயற்கை விவசாயத்தை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த திட்டம் ஒரு சில மாநிலங்களில் பின்பற்றப்பட்டு வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இது இந்தியா முழுவதிலும் விரைவில் செயல்படுத்தப்படும்.
மத்திய அரசு மாநில அரசுடன் இணைந்து விவசாயிகள் தேசிய விவசாய சந்தைகளின் மூலம் பயன்பெறுவதற்கான வழிவகை செய்யப்படும். மேலும் 2022ஆம் ஆண்டுக்குள் விவசாயிகளின் வருமானத்தை பெருக்குவதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.