மத்திய அரசின் அமலாக்கத் துறை (ED), மத்தியப் புலனாய்வுப் பிரிவு (CBI), தீவிர மோசடி விசாரணை அலுவலகம் (Serious Fraud Investigation Office) ஆகியவை ஏற்கனவே மேற்கு வங்கத்தில் உள்ள சாரதா குழுமம், ரோஸ் வாலி குழுமம் உள்ளிட்ட மாபெரும் சிட் நிதி நிறுவனங்களுக்கு எதிராக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன. இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கியின் சந்தை புலனாய்வுப் பிரிவு, மேற்கு வங்கத்தில் 2015ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து செயல்பட்டுவரும் 194 சிறு, குறு நிதி நிறுவனங்களுக்கு எதிராக தற்போது விசாரணையைத் தொடங்க உள்ளது.
இந்த 194 சிட்ஃபண்ட், மல்டி லெவல் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் குறித்து நவம்பர் 2016ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி முதன்முறையாக மேற்கு வங்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்தது. அப்போது ரிசர்வ் வங்கி இந்த 194 நிறுவனங்கள் தொடர்பான அனைத்து விவரங்களையும் மாநிலச் செயலகத்துக்கு அனுப்பியது. இந்த நிறுவனங்களுக்கு எதிராக மாநில அரசு ஏதேனும் முன்முயற்சி எடுத்துள்ளதா என்றும், இந்த நிறுவனங்கள் குறித்து மாநில அரசிடம் ஏதேனும் கூடுதல் தகவல்கள் உள்ளதா என்றும் மத்திய வங்கி விசாரிக்கும் என, மூத்த வங்கி அலுவலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நிதித் திரட்டலின் அளவைப் பொறுத்தவரை, ரோஸ் வாலின் குழுமத்துடன் ஒப்பிடும்போது இந்த 194 நிறுவனங்கள் மிகச் சிறியவை. குறைந்தபட்சம் 2016-17 நிதியாண்டு வரை அவை அவ்வாறு இருந்தன. சரியான கண்காணிப்பு மற்றும் நடவடிக்கை இல்லாத நிலையில் ஒரு சிறிய நிறுவனம் ஒரு மாபெரும் நிறுவனமாக மாற முடியும். நவம்பர் 2016ஆம் ஆண்டு, ரிசர்வ் வங்கி இந்த 194 சிட் ஃபண்ட் நிறுவனங்கள் பற்றிய விவரங்களை மாநில அரசிடம் ஒப்படைத்தபோது, மாநில அரசு விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்காலத்தில் இந்த நிறுவனங்கள் ஏதேனும் சாரதா அல்லது ரோஸ் வாலி போன்ற பெரிய நிதி மோசடி நிறுவனங்களாக மாறக்கூடும் என்றும் எச்சரித்தது.