கரோனா வைரஸ் காரணமாக போடப்பட்ட ஊரடங்கால், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படாமல் இருந்தன. மூன்றாம் கட்ட நீட்டிப்பிற்குப் பிறகு ஊரடங்கில் மத்திய, மாநில அரசுகள் சில தளர்வுகள் அறிவித்தன. அதன்மூலம், 10 சதவிதத்திற்கும் குறைவான நிறுவனங்கள் செயல்பட தொடங்கியுள்ளன. மீதமுள்ள நிறுவனங்கள் 50 சதவீத பணியாளர்களுடன் பணியைத் தொடங்குவதற்கு அரசின் அனுமதி கோரி காத்திருக்கின்றன.
ஊரடங்கு காலத்தில் தொடர்ந்து இயக்காமல் கடன்களை திரும்ப செலுத்துதல், தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுத்தல், மின்சார கட்டணம் செலுத்துதல் போன்றவை செய்ய வேண்டியுள்ளதால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக தொழில்துறையினர் கூறுகின்றனர். அதனால், 3 மாதம் ஜி.எஸ்.டி வரியில் இருந்து விலக்கு, மின்சார கட்டணம் ரத்து உள்ளிட்டவற்றை தமிழ்நாடு அரசு பரிசீலிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.
சிறு நிறுவனங்களின் பிரச்சினைகள் தொடர்பாக யுத்யோக் பாரதி தொழிற்சங்கத்தின் சென்னை மண்டல தலைவரும், அம்பத்தூர் தொழிற்பேட்டையில் ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள், என்ஜினியரிங் பணிகளை உற்பத்தி செய்யும் கே.வி.எஸ். இன்டஸ்டிரீஸ் தலைமை செயல் அலுவலருமான வேற் செழியன் ஈடிவி பாரத் செய்திகளிடம் பேசுகையில், “எங்களிடம் பணியாற்றியவர்களுக்கு மார்ச் மாத சம்பளத்தை கொடுத்துள்ளோம். நிறுவனத்தை இயகாமல் ஏப்ரல் மாத சம்பளத்தை எப்படி கொடுப்பது. பெரு நிறுவனங்கள் தங்கள் செயல்பாட்டை தொடங்கி வரும் நிலையில், அவர்களுக்கு உதிரி பாகம் தயாரிக்கும் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தால், அவர்கள் வெளி மாநிலங்களில் உள்ள நிறுவனங்களை நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் அதிக அளவில் ஆட்டோமொபல் நிறுவனங்கள், ஆயத்த ஆடை உற்பத்தி நிறுவனங்கள், ஏற்றுமதி நிறுவனங்கள், தொழில் கருவிகளை உற்பத்தி செய்யும் என்ஜினீயரிங் நிறுவனங்கள் உள்ளன. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் சுமார் மூன்று லட்சம் தொழிலாளர்கள் பணி செய்துவரும் நிலையில், அவர்களில் 65 ஆயிரம் புலம்பெயர் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். அவர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு திரும்ப சென்றால் உற்பத்தி பணி மிகப் பெரிய அளவில் பாதிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
தொழில் தொடங்க அனுமதி கோரும் அம்பத்தூர் தொழிற்பேட்டை! சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டை தொழிலதிபர்கள், பல்வேறு சிறு, குறு நிறுவனங்களின் கூட்டமைப்புகள் தமிழ்நாடு சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை செயலாளர், தொழில்துறை செயலாளரை சந்தித்து தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர். இன்னும் சில நாள்களில் தங்களுக்கு அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க...'இரண்டு மாசம் சம்பளம் கொடுத்தோம்... இப்போ முடியல' - கைவிரித்த இண்டிகோ