இந்திய பொருளாதாரம் லத்தீன் அமெரிக்க நாடுகள் போல் இல்லாமல் எப்போதும் சீரான நிலையில் இருப்பதால் 2024-ஆம் ஆண்டுக்குள் பொருளாதாரத்தை இரண்டு மடங்கு உயர்த்த முடியும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது. முடியாதது என்று எதுவுமே கிடையாது என்ற மாவீரன் நெப்போலியன் வார்த்தைக்கு ஏற்ப, மத்திய அரசு மற்றும் பல்வேறு பொருளாதார நிபுணர்கள் இந்திய பொருளாதாரம் இன்னும் ஐந்து ஆண்டுகளில் 5 மில்லியன் டாலருக்கு உயர்ந்தால் அனைவருக்கும் மகிழ்ச்சி தருவது மட்டுமின்றி பிற நாடுகளின் பார்வையில் இந்தியா உயர்ந்து விளங்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசின் வாக்குறுதிப்படி இந்திய பொருளாதாரம் தற்போதைய பொருளாதாரத்தை விட இரண்டு மடங்கு உயர்ந்தால் மட்டுமே இந்த 5 டிரில்லியன் டாலர் இலக்கை இந்தியாவால் எட்ட முடியும். இந்திய பொருளாதாரத்தை உயர்த்துவது எவ்வளவு முக்கியமோ அதே போல் மாநிலங்களின் பொருளாதாரத்தை ஆரோக்கியமாக பேணி காக்க வேண்டும்.
மாநிலங்களின் பொருளாதாரம் உயர்ந்தால் மட்டுமே இந்தியாவால் வளர்ச்சி பெற முடியும். தற்போது மாநில அரசுகளுக்கு தேவையான நிதி உள்ளிட்டவற்றை மத்திய அரசு சீராக வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அப்படி செய்தால் மட்டுமே இந்திய பொருளாதாரம் வளர்ச்சியை நோக்கி பயணிக்கும் எனவும் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் இரண்டு மடங்கு கூட உயரவில்லை என்றும் 2014 முதல் 2017-ஆம் ஆண்டுகளில் மாநிலங்களில் உள்ள தொழிற்சாலைகளின் எண்ணிக்கை ஓரளவு மட்டுமே உயர்ந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுவது ஜிஎஸ்டி வரி உயர்வு, பணமதிப்பிழப்பு உள்ளிட்டவையே என்கின்றனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு அனைத்து துறைகளுமே கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
இந்திய பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் மாநில வரி வருவாய் 1990-1991-ஆம் ஆண்டுகளில் 30 ஆயிரத்து 300 ரூபாய் கோடியாக இருந்த நிலையில், நிதியாண்டு முடிவில் 11 .99 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்து. மேலும் 2014-2015-ஆம் ஆண்டுகளில் 7 .80 லட்சம் கோடியாக இருந்த வரி வருவாய் 11 .99 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. இது 1990-1991-ஆம் ஆண்டை விட 35 சதவிகிதம் குறைந்துள்ளது. இது நேரடியாக இந்திய பொருளாதாரத்தை பெரிதும் பாதித்த நிலையில், பொருளாதார வீழ்ச்சியை தற்போது ஏற்படுத்தியிருக்கிறது.
அந்தந்த மாநில அரசுகள் இலவசம் உள்ளிட்ட திட்டங்களில் அதிக கவனம் செலுத்தாமல் தொழில் முதலீடுகளை ஊக்குவித்து வேலை வாய்ப்பை ஏற்படுத்துவதே இதற்கு நிரந்தர தீர்வு அளிக்கும் என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். மத்திய அரசு அவசர நடவடிக்கை மேற்கொண்டு இந்திய பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் செயல்பட்டால் நிச்சயம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் பொருளாதாரம் 5 டிரில்லியன் டாலராக உயரும் என்பது உறுதி.