இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளில் மக்களின் அத்தியாவசியமாக மாறியுள்ளது வாட்ஸ்அப் செயலி. இதன் அம்சங்களை அனைத்து தரப்பு மக்களும் பயன்படுத்தும் வண்ணம் ஃபேஸ்புக் நிறுவனம் இலவசமாக வழங்கிவருகிறது. அலுவலகம் சார்ந்த தகவல்கள், தனியுரிமை சார்ந்த தகவல்கள், தொழில் ரீதியான தகவல்கள் ஆகிய அனைத்திற்கும் ஏதுவாக செயல்பட்டுவருகிறது இந்த வாட்ஸ்அப் செயலி.
இத்தருணத்தில் வாட்ஸ்அப் செயலியில் ஸ்பைவேர் மூலம் சில ஹேக்கர்கள் நுழைந்துள்ளதாகவும் உடனடியாக அனைத்து பயனர்களும் மேம்படுத்தப்பட்ட புதிய பதிப்பைத் தரவிறக்கம் செய்துகொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டது. இது குறித்து கருத்து வெளியிட்ட ஃபேஸ்புக் நிறுவனம், “இஸ்ரேலின் உளவு அமைப்புடன் தொடர்புடையதாகக் கருதப்படும் என்.எஸ்.ஓ. என்ற நிறுவனம் ‘பெகாசஸ்’ (pegasus) என்ற ஸ்பைவேர் மென்பொருள் உருவாக்கத்துக்குப் பின்னால் இருக்கலாம்” என்று குற்றஞ்சாட்டியிருந்தது.
கூடங்குளத்தில் ‘சைபர்’ தாக்குதல் உண்மையே: ஒப்புக்கொண்ட அணுசக்தி கழகம்!
இது தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தது ஃபேஸ்புக் நிறுவனம். இந்த வழக்கு நேற்று அமெரிக்கா, சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள கூட்டாட்சி நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, "இஸ்ரேலைச் சேர்ந்த என்.எஸ்.ஓ. நிறுவனம் உலகம் முழுவதும் உள்ள ஆயிரத்து 400 பேரை வாட்ஸ்அப் மூலம் கண்காணித்ததாக ஃபேஸ்புக் நிறுவனம் குற்றஞ்சாட்டியது.
இந்தியாவில் உள்ள பத்திரிகையாளர்கள், மனித உரிமை செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு நலன் கருதி அவர்களின் பெயர்கள், தொலைபேசி எண்களை எங்களால் வெளியிட முடியாது. ஆனால், ஸ்பைவேர் மூலம் கண்காணிக்கப்பட்ட பயனர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதை மட்டும் கூறமுடியும்" என்று நிறுவனம் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.