மத்திய அரசின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் வகையில், விதிகளை மீறிய 500க்கும் மேற்பட்ட கணக்குகளை நிரந்தரமாக முடக்கி வைப்பது உட்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக ட்விட்டர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கடந்த 10 நாள்களில், தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடமிருந்து பல்வேறு கோரிக்கைகள் வந்துள்ளன. அதனை ஏற்று, விதிகளை மீறியதாகக் கருதப்பட்ட 500 கணக்குகள் நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளன. விதிகளை மீறும் கணக்குகள் நிச்சயம் முடக்கப்படும். அதேபோல், தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கம் கொண்ட ஹேஷ்டேக்குகள் அடங்கிய பதிவுகளும், நீக்கப்படுகின்றன" எனக் குறிப்பிட்டிருந்தனர்