வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்திடம், நடுநிலைத்தன்மையற்று வழங்கப்பட்ட எலைட் திட்டங்கள் குறித்து விளக்கமளிக்குமாறு டிராய் கோரியுள்ளது.
மாதந்தோறும் 499 ரூபாய்க்கு மேல் கட்டணம் செலுத்தும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்கள் அனைவரும் பிளாட்டினம் வாடிக்கையாளர்களாகக் கருதப்படுவார்கள் என்றும், அவர்களுக்கு 4ஜி சேவையில் சில முன்னுரிமைகள் அளிக்கப்படும் என்றும் ஏர்டெல் முன்னதாக அறிவித்திருந்தது.
அதேபோல, வோடஃபோன்-ஐடியா நிறுவனமும் ரெட் எக்ஸ் (REDX) என்ற போஸ்ட்பெய்டு திட்டத்தை கடந்த சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. அதன்படி, மற்ற வாடிக்கையாளர்களைவிட இத்திட்டத்தில் உள்ளவர்களுக்கு 50 விழுக்காடு கூடுதலான வேகத்தில் இணைய சேவைகள் கிடைக்கும், மேலும் சர்வதேச ரோமிங், அளவற்ற டேட்டா உள்ளிட்ட பல்வேறு வசதிகளும் இத்திட்டத்தில் கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இச்சூழலில், ஏர்டெல், வோடஃபோன்-ஐடியா நிறுவனங்களின் இந்த ’ப்ரீமியம் திட்டங்கள்’, விதிமுறைக்கு எதிராக உள்ளதாகக் கூறி இத்திட்டங்களுக்குத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் தடைவிதித்துள்ளது.
ஒரே நெட்வொர்க்கிலுள்ள குறிப்பிட்ட பிரிவு வாடிக்கையாளர்களுக்கு மட்டும் அதிவேக சேவைகளை வழங்குவது என்பது, சேவை நடுநிலைமைக்கு (Net Neutrality) எதிராக உள்ளதாகக் கூறி டிராய் இத்திட்டங்களுக்கு தடைவிதித்துள்ளது. மேலும், வோடாஃபோன் - ஐடியா நிறுவனத்திடம் இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.