ஹாங்காங் (சீனா) :டிக்டாக் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் கெவின் மேயர், தான் வகித்த பதவியை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் நிறுவன ஊழியர்களுக்கு எழுதியிருக்கும் கடிதத்தில், “நான், கனத்த இதயத்தோடு தான் நிறுவனத்தை விட்டு வெளியேற முடிவு செய்துள்ளேன் என்பதை உங்கள் அனைவருக்கும் தெரியப்படுத்திக் கொள்கிறேன். டிக் டாக் பொது மேலாளர் வனேசா பப்பாஸ் இடைக்கால தலைமை நிர்வாக அலுவலராக இருப்பார்” என்றும் அதில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா - சீனா எல்லை மோதலைத் தொடர்ந்து இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி சீனாவை சேர்ந்த டிக் டாக், ஹலோ உள்ளிட்ட 59 கைப்பேசி செயலிகளுக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, சீன உளவுத்துறையின் ஒரு கருவியாக இருக்கக்கூடும் என்றும், தேசிய பாதுகாப்பைக் கருதியும், அமெரிக்காவும் டிக் டாக் செயலிக்கு தடைவிதிக்க முடிவுசெய்தது.