நாட்டின் தொலைத்தொடர்பு சேவைகளை ஒழுங்குபடுத்தும் பணியை ட்ராய் எனும் அமைப்பு செய்கிறது. அந்த அமைப்பு நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் புள்ளிவிவரங்களை அறிக்கையாக இன்று வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் படி, 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாத இறுதியில் நாட்டின் ஒட்டுமொத்த தொலைத்தொடர்பு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 120.54 கோடியாக உயர்ந்துள்ளது. அதற்கு முந்தைய ஜனவரி மாதத்தில் 120.37 கோடியாக இருந்த எண்ணிக்கை ஒரே மாதத்தில் 27 லட்சம் அதிகரித்துள்ளது.
இந்த உயர்வு ஜியோ மற்றும் பி.எஸ்.என்.எல். நிறுவனங்களால் ஏற்பட்டுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது. 2019 ஆம் ஆண்டு ஜனவரி-பிப்ரவரி மாதங்களுக்கு இடையில் ஜியோ மற்றம் பி.எஸ்.என்.எல் நிறுவனங்களில் புதிதாக 86.39 லட்சம் வாடிக்கையாளர்கள் இணைந்துள்ளனர். அதேவேலையில் மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்து 69.93 லட்சம் பேர் வெளியேறியுள்ளனர்.
நாட்டிலேயே அதிகபட்சமாக வோடபோன்-ஐடியா நிறுவனம் 40.93 கோடி வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. இருப்பினும் கடந்த ஒரு மாதத்தில் அந்நிறுவனம் 57.87 லட்சம் வாடிக்கையாளர்களை இழந்துள்ளது. இரண்டாவது பெரிய நிறுவனமாக திகழும் ஜியோ 77.93 லட்சம் வாடிக்கையாளர்களை புதிதாக சேர்த்து மொத்தம் 29.7 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ளது. 11.62 கோடி வாடிக்கையாளர்களை கொண்டு பி.எஸ்.என்.எல் நிறுவனம் மூன்றாவது இடத்தில் உள்ளது.