இந்தியாவின் முன்னணி வாகனத்தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அரசு போக்குவரத்து கழகங்களுக்காக மின்சாரப்பேருந்துகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. லக்னோ, கொல்கத்தா, இந்தூர், கவுகாத்தி, ஜம்மூ ஆகிய நகரங்களுக்கு இதுவரை 72 மின்சாரப்பேருந்துகளை தயாரித்து அனுப்பிய நிறுவனம், வரும் ஜூலைக்குள் மேலும் 255 மின்சாரப் பேருந்துகள் தயாராகி பயன்பாட்டுக்கு அனுப்பப்படும் எனத் தெரிவித்துள்ளது.
ஜூலைக்குள் 255 மின்சாரப் பேருந்துகள் தயார் - டாடா நிறுவனம் அறிவிப்பு - டாடா மோட்டார்ஸ்
பல்வேறு அரசுப்பேருந்து போக்குவரத்துக் கழகங்களுக்காகத் தயாரிக்கப்படும் 255 மின்சாரப்பேருந்துகள் வரும் ஜூலைக்குள் தயாராகிவிடும் என டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனம், சரியான நேரத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட பேருந்துகள் அனைத்தும் டெலிவரி செய்ய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருகிறது. பேருந்துக்கான பேட்டரிகளை வெளிச்சந்தையில் வாங்குவதில் சிறு தாமதம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும், வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் 75 சதவிகித பேருந்துகளும், ஜூலை மாத இறுதிக்குள் அனைத்து பேருந்துகளும் பயன்பாட்டுக்கு அனுப்பும் வகையில் தயாராகிவிடும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.
கச்சா எண்ணெய் சார்ந்த எரிசக்தியால் சுற்றுச்சூழல் மாசுபடுதல் போன்ற பிரச்னைகள் அதிகம் ஏற்படுவதால் மாற்று எரிசக்தியை அரசாங்கங்கள் ஊக்குவிக்கத் தொடங்கியுள்ளன. அத்துடன் கச்சா எண்ணெய் இறக்குமதியை கட்டுக்குள் கொண்டுவரவும் மின்சாரப் பேருந்துகளின் பயன்பாட்டை அரசு அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாகவே நாட்டின் மாற்று எரிசக்தி வாகன போக்குவரத்து உற்பத்தியின் முன்னணி நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் திகழ்ந்துவருவது குறிப்பிடத்தக்கது.