எலான் மஸ்க் தலைமையிலான டெஸ்லா நிறுவனம் இந்தியாவிற்குள் நுழைவதற்கு முன்னரே, ஓலா நிறுவனம் கால்பதிக்க முடிவு செய்துவிட்டது. உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தி மையமான ஓலா ஃபியூச்சர் பேக்டரி திட்டத்தைக் கிருஷ்ணகிரியில் அமைத்திட முடிவுசெய்துள்ளது. வரும் 2022-க்குள் ஆண்டுதோறும் ஒரு கோடி வாகனங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளது.
இது குறித்து பேசிய ஓலா தலைமை நிர்வாக அலுவலர் பவிஷ் அகர்வால், "கிருஷ்ணகிரியில் 500 ஏக்கர் பரப்பளவில் ஓலா ஃபியூச்சர் பேக்டரி திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம். இந்த ஆலையில் 2 விநாடிக்கு ஒரு மோட்டார் சைக்கிள் உற்பத்தி ஆகும். 3,000 ஏஐ கொண்ட மிக முன்னேறிய இருசக்கர வாகன தொழிற்சாலையாக இது இருக்கும்.
தொழிற்சாலையின் பிரதான உற்பத்திக்கூடம் மட்டுமே 150 ஒலிம்பிக் நீச்சல் குளம் அளவுக்கு பிரமாண்டமாக கட்டப்படுகிறது. இந்தத் தொழிற்சாலைக்காக ரூ.2,400 கோடி முதலீடு செய்யப்படுகிறது. பேட்டரி முதல் அனைத்துவிதமான சாதனங்களையும் உற்பத்தி செய்திடும் வகையில் தொழிற்சாலையில் வசதிகள் இடம்பெறும்.