கடந்த மாதம், ஏர்டெல் நிறுவனம் பிளாட்டினம் எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்தத் திட்டத்தில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 4ஜி இணைய சேவை அதி வேகத்தில் கிடைக்கும் எனத் அறிவிக்கப்பட்டிருந்தது. மற்றவர்களைவிட பிளாட்டினம் வாடிக்கையாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் கூறப்பட்டிருந்தது.
அதே போல், ஏற்கனவே வோடஃபோன் நிறுவனம் முன்பு RedX என்ற போஸ்ட்பெய்ட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு 50 விழுக்காடு அதிவேக இணைய சேவையும், சலுகைகள் வழங்கப்படும் எனக் கூறப்பட்டிருந்தது. எனவே, ஏர்டெலின் பிளாட்டினம் திட்டம், வோடஃபோனுக்கு போட்டியாக வந்துள்ளது என்றே பேசப்பட்டு வந்தது.
ஆனால், யாரும் எதிர்பாராத வகையில் ஏர்டெலின் பிளாட்டினம், வோடஃபோனின் ரெட் எக்ஸ் திட்டங்களை நிறுத்தி வைக்குமாறு ட்ராய் நிறுவனம் தெரிவித்துள்ளது. பிரீமியம் திட்டங்களால் அதில் சேராத வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரம் பாதிக்கப்படும் என்றும், இந்தத் திட்டங்கள் விதிமுறைகளை மீறும் வகையில் இருப்பதாகவும் ட்ராய் கருத்து தெரிவித்திருந்தது. மேலும் இரண்டு நிறுவனங்களிடமும் பல கேள்விகளை ட்ராய் முன்வைத்திருந்தது.
இந்நிலையில், ட்ராயின் சந்தேகங்களுக்கு இரண்டு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் தற்போது பதில் அளித்துள்ளன. இதுகுறித்து வோடஃபோன் நிறுவனம் கூறுகையில், "சந்தாதாரர்களுக்கு ஒட்டுமொத்த சிறந்த அனுபவத்தை வழங்கவே ரெட்எக்ஸ் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதே சமயம், ரெட்எக்ஸ் திட்டத்தில் இல்லாத வாடிக்கையாளர்களுக்கு சேவையில் குறைபாடு நிச்சயம் இருக்காது. அனைவருக்கும் சிறந்த சேவை கிடைக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் எங்கள் நிறுவனம் பணியாற்றி வருகிறது. ரெட்எக்ஸ் வாடிக்கையாளர்களின் விகிதம் ஒட்டுமொத்த 4ஜி வாடிக்கையாளர்களுடன் ஒப்பிடுகையில் மிகச் சிறிய அளவிலே உள்ளது. ஆனால், மற்ற போஸ்பேய்ட் சேவைகளுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது வாடிக்கையாளர்கள் இந்தக் கட்டண சேவை பெறுவதில் ஆர்வம் காட்டியது தெளிவாகத் தெரிகிறது" எனத் தெரிவித்தனர்
இதைத் தொடர்ந்து பேசிய ஏர்டெல் நிறுவனம், "சுமார் ஒன்பது மாதங்களுக்கு முன்பு வோடஃபோன் கொண்டு வந்த இதே திட்டத்திற்கு எந்தவொரு ஆட்சேபனையும் எழுப்பப்படவில்லை என்பதால் தான் நாங்கள் பிளாட்டினம் திட்டத்தை கொண்டு வந்தோம். எங்கள் நிறுவனம் திட்டத்தை அறிமுகம் செய்ததும் தடை விதிப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. பல ஆபரேட்டர்கள் சலுகைகளை குறிப்பிட்ட சந்தாதாரர்களுக்கு அல்லது குறிப்பிட்ட சாதனங்களுக்கு மட்டும் கிடைக்கும் வகையில் அறிமுகப்படுத்துகின்றனர்.
எடுத்துக்காட்டாக ஜியோ நிறுவனம் இலவச ஹாட்ஸ்டார் OTT சேவையை வழங்குகிறது. அதே போல், ஜியோ செல்போனுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன. ஏர்டெல் வழங்கும் சலுகை வோடஃபோன் ஐடியா லிமிடெட் 2019 நவம்பரில் செய்ததைவிட வேறுபட்டதல்ல. இத்தகைய சலுகைகள் வங்கி, விமான நிறுவனங்கள், விடுதிகள் ஆகியவற்றில் வாடிக்கையாளர்களை அதிக நேரம் செலவிட வைக்கும் வழிமுறைகளாகும். வரவிருக்கும் 5ஜி இணைய சேவையை மக்களுக்கு வழங்க பல்வேறு வகையான அப்டேட்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாங்கள் உள்ளோம். புதுமையைக் கொண்டு வந்து இந்திய சந்தையில் இடத்தை பிடிக்க வேண்டும். ஏற்கனவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நஷ்டத்தில் இருந்தாலும், வாடிக்கையாளர்களிடம் அதிகம் பணம் வசூலிப்பதில்லை" எனத் திட்டவட்டமாக தெரிவித்தனர்.