அமெரிக்காவின், ‘ஃபோர்ப்ஸ்’ இதழ், உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில், ஆசியாவிலேயே மிகப்பெரிய பணக்காரராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவர் முகேஷ் அம்பானி முதலிடத்தில் இருக்கிறார்.
அவர் ஆறு லட்சத்து 34 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் முதலிடத்தில் வகிக்கிறார். இவர், உலகப் பணக்காரர்கள் பட்டியலில், 10ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
கடந்தாண்டு, ஆசியப் பணக்காரர்களில் முதலிடத்திலிருந்த, சீனாவின் அலிபாபா நிறுவனத் தலைவர் ஜாக்மா, இந்தாண்டு, ஆறாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார். ஓராண்டில் இவரது சொத்து மதிப்பு 75 ஆயிரம் கோடி ரூபாய் உயர்ந்துள்ள போதிலும், மொத்த சொத்து மூன்று லட்சத்து 63 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கே இருந்துள்ளது.
இவர், உலகப் பணக்காரர் பட்டியலில் 17ஆவது இடத்திலிருந்து, 26ஆவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
இந்தியாவில், முகேஷ் அம்பானியை அடுத்து, இரண்டாவது பெரும் பணக்காரராக அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி உள்ளார். இவரின் சொத்து மதிப்பு மூன்று லட்சத்து 78 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். உலகப் பணக்காரர் பட்டியலில் 24ஆவது இடத்தில் உள்ளார்.
அதேபோல, ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ் நிறுவனர் ஷிவ் நாடார் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளுடன் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார். இவர், உலகப் பணக்காரர்களில், 71ஆவது இடத்தில் உள்ளார்.
‘கோவிஷீல்டு’ என்ற கரோனா தடுப்பூசி மருந்து தயாரிக்கும் சீரம் நிறுவனத்தை உருவாக்கிய, சைரஸ் பூனாவாலா, இந்தியப் பணக்காரர் பட்டியலில் ஏழாவது இடத்தில் உள்ளார்.
உலகப் பணக்காரர் பட்டியலில் ‘அமேசான்’ நிறுவனர் ஜெஃப் பெசோஸ், தொடர்ந்து நான்கு ஆண்டுகளாக முதலிடத்தில் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 13 லட்சத்து 27ஆயிரம் கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை - ஆர்பிஐ ஆளுநர்