இந்தியாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் கடந்த நான்கு மாதங்களாக பெரும் கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகிறது. சுமார் 8 ஆயிரம் கோடி ரூபாயாக கடன் சுமை அதிகரித்ததன் காரணமாக ஊழியர்களுக்கு சம்பளம் தரமுடியாமல், விமானங்களை சரிவர இயக்க முடியாமல் பெரும் சோதனைக்குள்ளானது. இந்நிலையில், சக முதலீட்டாளர்களின் அழுத்தத்தினால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் நிறுவனத்தின் பொறுப்புகளில் இருந்து கடந்த மாதம் விலகினார்.
ஜெட் ஏர்வேஸ் சேவை தற்காலிகமாக முடக்கம்! - விமான சேவை
டெல்லி: பெரும் நஷ்டத்தில் இயங்கி வரும் ஜெட் ஏர்வேஸ் விமானத்தின் சேவையை அந்நிறுவனம் தற்காலிகமாக முடக்கியுள்ளது.
நிறுவனம் மீண்டு வர சக பங்குதாரர்கள் சார்பில் 400 கோடி ரூபாய் அவசர கால நிதியாக தர முடிவெடுத்தனர். இந்நிலையில், தற்போது இம்முடிவில் இருந்து பங்குதாரர்கள் பின் வாங்கியதால் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தனது அன்றாட சேவைகளை நடத்த முடியாத சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இன்று இரவு 10.30 மணியுடன் எங்கள் நிறுவனத்தின் விமான சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுகிறது. உள்நாட்டு, வெளிநாட்டு விமான சேவைகள் காலவரையின்றி நிறுத்தியுள்ளோம் என அதிர்ச்சி அறிக்கையை தெரிவித்துள்ளது.
கடன் அளிக்க பங்குதாரர்கள் முன் வராததால் எரிபொருள் விமான இயக்க செலவீனங்களை நிறுவனத்தால் செய்யமுடியவில்லை. எனவே தவிர்க்க முடியாத நிலையில் கடினமான முடிவை எடுக்கும் சூழல் ஏற்பட்டுள்ளதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. 25 ஆண்டுகளாக விமான சேவை இயக்கத்தில் ஜெட் ஏர்வேஸ் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.