நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருவதால், பல மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. பொதுஇடங்களில் மக்கள் கூட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திரையரங்குகள், பொழுதுபோக்குப் பகுதிகள் என அனைத்தும் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளன. ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணியாற்ற வேண்டும் என தனியார் நிறுவனங்கள் அறிவுறுத்தியுள்ளன. மத்திய அரசு ஊழியர்களும் சுற்று அடிப்படையில் வீடுகளில் இருந்து பணியாற்றக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இச்சூழலில் கரோனா பெருந்தொற்றைத் தடுக்கும் வகையில், நாளை (மார்ச் 22 ஆம் தேதி) நாடு முழுவதும் ‘மக்கள் ஊரடங்கு’ பிறப்பிக்கப்படுவதாகவும், மக்கள் காலை 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை வீட்டிலேயே இருந்து ஒத்துழைக்க வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
பிரதமரின் அழைப்பை ஏற்று, டெல்லி மெட்ரோ சேவைகள் ஞாயிற்றுக்கிழமை மூடப்படும் என்று தெரிவித்துள்ளது. அகில இந்திய வர்த்தகர்களின் கூட்டமைப்பு (சிஐஐடி) இன்று முதல் திங்கள் வரை அத்தியாவசிய சேவைகளைத் தவிர்த்து டெல்லி சந்தைகளை முழுமையாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. இருப்பினும், மருந்துகள், பால், மளிகைக் கடைகள் மூடப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
200 மி.லி. சானிடைசருக்கு அதிகபட்ச சில்லறை விலையாக ரூ.100 நிர்ணயம்!
மார்ச் 23 முதல் ஏப்ரல் 3 வரை திட்டமிடப்பட்ட 2019 யூபிஎஸ்சி (UPSC) தேர்வுக்கான மீதமுள்ள நேர்காணல்களை மத்திய பொது சேவை ஆணையம் ஒத்திவைத்தது. நேர்முகத் தேர்வுகளுக்கான புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.