இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதி கோவிட்-19 பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனால் பயணிகள் விமான சேவைகள் மார்ச் இறுதி வாரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டன. ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திங்கள்கிழமை முதல் உள்நாட்டு விமானச் சேவை மீண்டும் தொடங்கியது.
இருப்பினும், விமானத்தில் வரும் பயணிகள் கட்டாயம் தனிமைப்படுத்தும் முகாமில் 14 நாள்கள் இருக்க வேண்டும் என்று பல மாநிலங்களும் நிபந்தனை விதித்துள்ளன. இதனால் பலரும் தங்கள் விமான டிக்கெட்டுகளை ரத்து செய்கின்றனர்.
அப்படி ரத்து செய்யப்படும் விமான டிக்கெட்டுகளுக்கான பணத்தை இண்டிகோ மற்றும் ஏர்ஏசியா விமான நிறுவனங்கள் பயணிகளின் வங்கிக் கணக்குகளுக்குப் பதில் இணைய வாலெட்டுகளில் வழங்குகின்றன. இணைய வாலெட்டுகளில் வழங்கப்படும் பணத்தை வைத்து மறுமுறை டிக்கெட்டுகளை பதிவு செய்யலாம். இருப்பினும் அதை மற்ற எந்த செலவுகளுக்கும் பயன்படுத்த முடியாது.