இந்தியாவில் கோவிட்-19 இரண்டாம் அலை மிகத் தீவிரமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆக்ஸிஜன், படுக்கைகள் தட்டுப்பாடு ஏற்படும் அளவுக்கு பாதிப்பு எண்ணிக்கை உச்சம் தொட்டது.
இந்தக் காலத்தில் அரசு தனியார் உதவிகளையும் நாடியது. குறிப்பாக, கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் சமூகப் பொறுப்பு நிதி எனப்படும் CSR நிதியை கோவிட்-19 தொற்றை எதிர்கொள்ள பயன்படுத்துமாறு அரசு உத்தரவிட்டது.
இந்த இரண்டாம் அலை காலக்கட்டத்தில் கார்ப்பரேட் நிறுவனங்கள் சி.எஸ்.ஆர். மூலம் செய்த செலவு தொடர்பான புள்ளி விவரங்களை கார்ப்பரேட் விவகாரங்களுக்கான அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, ”கோவிட்-19 இரண்டாம் அலை காலத்தில் 1,600 கோடி ரூபாய் நிதியை பெருநிறுவனங்கள் செலவு செய்துள்ளன.
200 ஆக்ஸிஜன் மையங்கள், 75 தற்காலிக மருத்துவமனைகள், 10 ஆயிரம் படுக்கைகள், 3,500 வென்டிலேட்டர்கள் என பல்வேறு வசதிகள் இந்தத் தொகை மூலம் தயார் செய்து தரப்பட்டுள்ளன.
இதில் 35 விழுக்காடு பங்களிப்பு மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, உத்தரப் பிரதேச மாநிலங்களில் வழங்கப்பட்டுள்ளன. 33 நிறுவனங்கள் 150 கோடி ரூபாய்க்கும் மேல் அளித்துள்ளன” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:விலை உயரும் சி.என்.ஜி: முக்கிய நகரங்களில் அக்டோபர் மாதத்தில் 11% வரை உயர வாய்ப்பு