மத்திய அரசின் தொலைத் தொடர்பு நிறுவனங்களான, பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., ஆகிய நிறுவனங்கள் கடும் இழப்பில் இயங்குவதால், விருப்ப ஓய்வுத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நேற்று வரை, இந்த திட்டத்தின் கீழ், 70ஆயிரம் ஊழியர்கள், விருப்ப ஓய்வு பெற மனுக் கொடுத்துள்ளதாக, தொலைத் தொடர்புத்துறைச் செயலர் தெரிவித்தார்.
மத்திய அரசு நிறுவனமான எம்.டி.என்.எல்., எனப்படும் மஹாநகர் டெலிஃபோன் நிகாம் லிமிடெட், மகாராஷ்டிரா மாநிலம் மும்பை, டெல்லி ஆகிய இடங்களில் தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வருகிறது. பி.எஸ்.என்.எல்., எனப்படும், பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட் நிறுவனம், மற்ற மாநிலங்களில், தொலைத் தொடர்பு சேவையை அளித்து வருகிறது.
இதுவரை, பி.எஸ்.என்.எல்., எம்.டி.என்.எல்., நிறுவனங்களைச் சேர்த்து மொத்தம் 70 ஆயிரம் பேர் விருப்ப ஓய்வு பெற மனு கொடுத்துள்ளனர். ஓய்வூதியத் திட்டத்துக்கு ஊழியர்கள் காட்டியுள்ள ஆதரவு, இதுவரை இல்லாதது என்று கூறப்பட்டுள்ளது. மொத்தம், 94 ஆயிரம் ஊழியர்கள், வி.ஆர்.எஸ்., பெற விருப்பம் தெரிவிப்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.