டெல்லி: கரோனா பெருந்தொற்றின் காரணமாக ஜூன் 30ஆம் தேதி வரை கைகளுக்குப் பயன்படுத்தும் கிருமி நாசினி அதிகபட்ச சில்லறை விலையை 200 மில்லி லிட்டருக்கு 100 ரூபாய் என்று மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை நிர்ணயம்செய்துள்ளது.
முகக்கவசங்கள், கைகளுக்குப் பயன்படுத்தும் கிருமி நாசினி ஆகியவற்றின் மூலப் பொருள்களின் விலை கணிசமாக உயர்ந்துவருவதைக் கருத்தில்கொண்டு, அதனைக் கட்டுப்படுத்த மத்திய அரசு முடிவுசெய்தது. இதனைத் தொடர்ந்து மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் இன்று சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதில்,
- கைகளுக்குப் பயன்படுத்தும் கிருமி நாசினியின் அதிகபட்ச சில்லறை விலையை 200 மில்லி லிட்டருக்கு 100 ரூபாய்
- இரண்டு அடுக்கு பாதுகாப்பு கொண்ட முகக் கவசத்தின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.8
- மூன்றடுக்கு பாதுகாப்பு கொண்ட முகக் கவசத்தின் அதிகபட்ச சில்லறை விலை ரூ.10
இந்த அதிகபட்ச விலை நிர்ணயம் ஜூன் 30ஆம் தேதி வரை மட்டுமே இருக்கும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 19ஆம் தேதி கைகளுக்குப் பயன்படுத்தும் கிருமி நாசினியின் தயாரிப்புக்குப் பயன்படும் சாராயவகை மூலப் பொருள்களின் விலை கணிசமாக உயர்ந்துவந்ததையடுத்து, அதற்கு அரசு விலை நிர்ணயம் செய்தது குறிப்பிடத்தக்கது.