இந்தியாவின் முன்னணி விமான போக்குவரத்து சேவை நிறுவனமான ஜெட் ஏர்வேஸ், நிதிச்சுமை காரணமாக கடந்த மாதம் மூடப்பட்டது. வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வரும் ஜெட் ஏர்வேஸ், தனது சேவையை மேற்கொண்டு தொடர சக பங்குதாரர்களின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. கடன் சிக்கலை நீக்கி விமானச் சேவை மீண்டும் தொடர சுமார் ரூ.15 ஆயிரம் கோடி நிதி வேண்டும் என்று ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கோரிக்கை வைத்துள்ளது.
ஜெட் ஏர்வேஸ்க்கு ரூ.1,700 கோடி நிதியுதவி; எத்தியட் ஏர்வேஸ் அறிவிப்பு!
அபுதாபி: கடன் சுமையால் தத்தளிக்கும் ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்திற்கு ரூ. 1,700 கோடியை தற்காலிக நிதியுதவியாக வழங்குவதாக துபாய் சேர்ந்த எத்தியட் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் துபாயைச் சேர்ந்த விமான போக்குவரத்து நிறுவனமான எத்தியட் ஏர்வேஸ், ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு தற்காலிக உதவித் தொகையாக ரூ.1700 கோடி வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 24 விழுக்காடு பங்குகளை எத்தியட் ஏர்வேஸ் என்ற நிறுவனம் வாங்கியுள்ளது. எனவே அதற்கு இணையான வகையிலான தொகையை வழங்க முன் வந்துள்ளதாகவும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் ரூ.15 ஆயிரம் கோடி தேவைப்படும் நிலையில் தற்போது வழங்கவுள்ள ரூ.1,700 கோடியை விட கூடுதல் தொகையை எத்தியட் ஏர்வேஸ் நிறுவனத்திடம் எதிர்பார்த்திருந்தது. இருப்பினும் தன்னால் ரூ.1,700 கோடிக்கு மேல் ஒரு பைசா கூட கூடுதலாக வழங்க முடியாது எனத் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது எத்தியட் ஏர்வேஸ்.