நிதி முறைகேடு, கடன் சுமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நாட்டின் முக்கிய தனியார் வங்கியான யெஸ் வங்கி கடும் நெருக்கடியில் உள்ளது. வங்கியின் நிர்வாகப் பொறுப்பு ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ள நிலையில், அதன் வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்கிலிருந்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் பணமெடுக்கக் கூடாது என்று தற்காலிகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கிக்கு யெஸ் வங்கியை மறுகட்டமைப்பு செய்யும் பணி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து யெஸ் வங்கியின் பங்குகளை வாங்கும் திட்டத்தில் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், யெஸ் வங்கியின் நிறுவனர் ரானா கப்பூர் மீது நிதி முறைகேடு குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், கடந்த இரு நாள்களாக அமலாக்கத்துறை அவரிடம் விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், அவர் இன்று அதிகாலை அமலாக்கத்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோதப் பணப்பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள அவர், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு காவலில் வைக்கப்படுவார் எனத் தெரிகிறது. யெஸ் வங்கி வாடிக்கையாளர்கள் தங்களின் வைப்புத் தொகை குறித்து எந்த அச்சமும் கொள்ளத் தேவையில்லை என நிதித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:யெஸ் வங்கி பிரச்சனைக்கு 30 நாள்களில் தீர்வு - சக்திகாந்த தாஸ்