அமெரிக்காவின் முன்னணி வங்கியாகத் திகழ்ந்து வரும் சிட்டி வங்கிக்கு, ஹாங்காங், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரகம், லண்டன் ஆகியவை முக்கிய சந்தை ஆகும். எனவே, முக்கியமான சந்தைகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்திட சிட்டி வங்கி முடிவு செய்துள்ளது. அதன்படி, இந்தியா, சீனா, ஆஸ்திரேலியா, பஹ்ரைன், இந்தோனேசியா, கொரியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், போலந்து, ரஷ்யா, தைவான், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளிலிருந்து வெளியேற சிட்டி வங்கி முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து வங்கியின் உயர் அலுவலர்கள் கூறுகையில், "வெளியேறுவது என்பது இந்தியப் பிரிவை மூடுகிறது என எடுத்துக்கொள்ள தேவையில்லை. நடப்பு வாடிக்கையாளர்களுக்கு இதனால் எந்த பாதிப்பும் உடனடியாக ஏற்படாது. இந்தியாவில் உள்ள ஊழியர்களுக்கும் பாதிப்பு ஏதும் இல்லை. இந்திய ரீடெய்ல் பிரிவை வாங்குவதற்கு மாற்று நிறுவனத்தைத் தேடி வருகிறோம். இதனால், வங்கியின் தற்போதைய செயல்பாடுகள் வழக்கம்போல தொடரும்” எனத் தெரிவித்தனர்.