கரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. வைரஸ் பாதிப்பு இந்தியாவில் 1,500-ஐ கடந்துவிட்டது. கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
கரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு பொதுமக்களும், நிறுவனங்களும் தங்களால் இயன்ற நிதியுதவியை அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி டாடா சார்பில் ரூ. 1,500 கோடியும் பேடிஎம் ரூ. 500 கோடியும் ரிலையன்ஸ் ரூ. 500 கோடியும் நிதியுதவியை அளித்துள்ளன. அதேபோல நடிகர் அக்ஷய்குமாரும் ரூ. 25 கோடி அளிப்பதாக அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்தியாவின் பிரபல மென்பொருள் நிறுவனமான விப்ரோ கரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்கு நிவாரண நிதியாக ரூ. 1,125 கோடி அளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதாவது, விப்ரோ லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் ரூ.100 கோடியும், விப்ரோ எண்டர்பிரைசஸ் லிமிடெட் சார்பில் ரூ .25 கோடியும், அஸிம் பிரேம்ஜி அறக்கட்டளை சார்பில் ரூ.1000 கோடியும் வழங்கப்படுவதாக அறிவித்துள்ளார்.
நெருக்கடியான இந்தக் காலத்தில் மக்களுக்காக முன்னணியில் இருந்து போராடும் மருத்துவப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்குத் தேவையான உபகரணங்களை வாங்க இந்த நிதியுதவி உதவும் என்று விப்ரோ நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பிரதமரின் நிவாரண நிதிக்கு ரூ. 500 கோடி அளித்த பேடிஎம்