வங்கி இணைப்பு தொடர்பாக ஈடிவி பாரத் செய்தியாளரிடம் பேசிய அனைத்து இந்திய வங்கி ஊழியர்கள் சங்கத் தலைவர் சி.எச்.வெங்கடாசலம், "இணைப்பு மூலம் வங்கிகள் பெரிதாகவும், உலக அளவில் போட்டிப் போடக்கூடியதாகவும் இருக்கும் என்கிறது மத்திய அரசு. கடந்த 2008 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பொருளாதாரச் சரிவு ஏற்பட்டதும் பெரும் வங்கிகள் எல்லாம் திவாலாகின. இதிலிருந்து தெரிவது என்னவென்றால் பெரிய வங்கிகள் என்றால் அவை வலிமையானது என்று பொருளல்ல."
"தவிர மேலைநாட்டு வங்கிகள் முதலீட்டைக் கொண்டு வணிகம் செய்பவை, ஆனால் நம் நாட்டு வங்கிகள் மக்களின் வைப்புத்தொகையை வைத்தே கடன் வழங்கி சேவை செய்து வருகின்றன. எனவே மேலைநாட்டு வங்கிகளுடன் இந்திய வங்கிகளை ஒப்பிட முடியாது."
"விவசாயம், வேலைவாய்ப்பு, பெண்கள் முன்னேற்றம், சிறு குறு தொழில்கள் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றுக்குக் கடன் வழங்குவதே நாட்டின் தற்போதையத் தேவை. இதனைச் செய்ய சமூக அக்கறை கொண்ட வங்கிகளே தேவை. பெரிய வங்கிகள் பெரு நிறுவனங்கள் பின்னால் செல்லும் என்பதால் அது சாதாரண மக்களின் தேவையைப் பற்றிச் சிந்திக்காது. ஒரு நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு வங்கிச்சேவை மிகவும் முக்கியம். நாடு தற்போது சந்தித்து வரும் பொருளாதார பிரச்னைக்கு மத்தியில் வங்கிகளை இணைப்பதன் மூலம் வங்கிகளின் கவனம் திசை திரும்பும்."