பொதுவாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றமடைந்தாலும் வெள்ளியின் விலை பெரியளவு உயராது. இதனால் வெள்ளியை 'ஏழைகளின் தங்கம்' என்று அழைப்பார்கள். இருப்பினும், கடந்த வாரம் வெள்ளியின் கிடுகிடு விலையேற்றம் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இந்தியாவில் கடந்த வாரத்தில் மட்டும் ஒரு கிலோ வெள்ளியின் விலை ஒன்பதாயிரம் ரூபாய் வரை (17.5 விழுக்காடு) உயர்ந்துள்ளது. கடந்த மார்ச் மாதம் முதல் வெள்ளியின் விலை 70 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை வர்த்தகத்தின்போது, ஒரு கிலோ வெள்ளி 62,400 ரூபாய் வரை வர்த்தகமானது. சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் வெள்ளி தற்போது 22.79 அமெரிக்க டாலர்களுக்கு வர்த்தகமாகிறது. முதலீட்டிற்கு உகந்த உலோகம், தொழிற்சாலைகளுக்கு உபயோகிக்கப்படும் உலோகம் என்று இரு தரப்பும் இந்த விலை உயர்விற்கான முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.
கரோனா பரவல் காரணமாக நிலவும் நிச்சயமற்ற பொருளாதாரம் காரணமாகவும் அமெரிக்க-சீன வர்த்தகப் போர் காரணமாகவும் தங்கத்தின் மீதான முதலீடு பலமடங்கு அதிகரித்து. இந்தியாவில் 10 கிராம் தங்கத்தின் விலை 50,700 ரூபாய்க்கு வர்த்தகமானது. தொடக்கத்தில் வெள்ளியின் விலை உயர்வுக்கு இது ஒரு காரணமாக இருந்தது.
ஆனால், முக்கியமாக சோலார் பேனல்கள் உள்ளிட்ட பிற எலக்ட்ரானிக் பொருள்களைத் தயாரிக்க பயன்படுத்தப்படும் வெள்ளிக்கான தேவை அதிகரித்ததால், வெள்ளியின் விலை கிடுகிடுவென உயரத் தொடங்கியது.
காலநிலையைப் பாதுகாக்கும் மிகப் பெரிய ஊக்குவிப்பு திட்டம் குறித்த அறிவிப்பை கடந்த செவ்வாய்க்கிழமை ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்தது. காலநிலைக்கு எதிராகப் போராட 630 பில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டது. அதேபோல அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளர் ஜோ பிடனும் பசுமையான சக்தியை உற்பத்தி செய்ய இரண்டு டிரில்லியன் அமெரிக்க டாலர்கள் செலவிடப்படும் என்றும், இதன்மூலம் அமெரிக்க பொருளாதாரத்தையும் மீட்டெடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.
சோலர் பேனல்களில் பயன்படுத்தப்படும் ஒளி மின்னழுத்த செல்களை உற்பத்தி செய்யவும், ஆட்டோமொபைல் வாகனங்களை உற்பத்தி செய்யவும் வெள்ளி என்பது இன்றியமையாத ஒரு உலோகம். இதன் காரணமாக மாசற்ற பசுமை சக்தியை நாம் அதிகளவில் உற்பத்தி செய்யத் தொடங்கும்போது, வெள்ளிக்கான தேவை பல மடங்கு அதிகரிக்கும் என்று துறை சார்ந்த வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வெள்ளியின் விலை ஏற்றம் குறித்து ஏஞ்சல் புரோக்கிங்கில் நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவின் உதவித் துணைத் தலைவர் பிரதமேஷ் மல்லையா கூறுகையில், "நிலையாகவுள்ள தங்கத்தின் விலை, கரோனா தொற்றுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்ற நம்பிக்கையில் தொழிற்துறை நடவடிக்கைகள் மீண்டும் தொடங்கப்பட்டது. பலவீனமான அமெரிக்க டாலரின் மதிப்பு ஆகியவற்றால் சமீப நாள்களாக வெள்ளியின் விலை பல மடங்கு ஏற்றம் கண்டுள்ளது.
iShares ETF trustஇல் வெள்ளின் மீதான முதலீடு என்பது முன்னெப்போதும் இல்லாத வகையில் 16,379.08 டன்களாக உள்ளது. இது இந்த உலோகத்தின் (வெள்ளி) மீது முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய தயாராகவுள்ளதைக் காட்டுகிறது. இது விலை உயர்வை மேலும் அதிகப்படுத்தியுள்ளது" என்றார்.