கரோனா பெருந்தொற்றால் உலக நாடுகள் ஆட்டம் கண்டுள்ளன. பொருளாதாரம் பெரும் பாதிப்படைந்துள்ள நிலையில், பொருள்களை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.
இதனைச் சரி செய்யும் வகையிலும் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் வகையிலும் உலகப் பொருளாதார மன்றம் வழிமுறை வெளியிட்டுள்ளது.
எதிர்காலத்தில் பெருந்தொற்று ஏற்படுமாயின் அதனைச் சமாளிக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்கவும் பொருளாதாரத்தைச் சீர்செய்யவும் பிளாக் செயின் தொழில் நுட்பத்தை உலகப் பொருளாதார மன்றம் வெளியிட்டுள்ளது.
இதன்மூலம் பயன்கள் அதிகரித்து இடர்கள் குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெருந்தொற்று காலத்தில் நுகர்வோரிடையே பொருள்களைத் தங்கு தடையின்றி கொண்டு சேர்ப்பதை உறுதி செய்வதில் அரசு, வணிகம் ஆகியவற்றின் மீது அழுத்தம் ஏற்படும் என மன்றம் தெரிவித்துள்ளது.
உலக வர்த்தகத்தில் கரோனாவால் ஏற்பட்ட அழுத்தத்தைக் குறைக்க உலக நாடுகளின் ஒத்துழைப்பு தேவை, விநியோக சங்கிலியைப் பலப்படுத்த வேண்டும் எனவும் மன்றம் கருத்து வெளியிட்டுள்ளது.
நம்பிக்கை, வெளிப்படைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையில்தான் விநியோக சங்கிலி இயங்குகிறது. பிளாக் செயின் தொழில்நுட்பத்தைச் சரியாகப் பயன்படுத்துவதன் மூலம் விநியோகச் சங்கிலியை மேம்படுத்தலாம்.
பிளாக்செயின் என்றால் என்ன?
பிளாக் செயின் தொழில்நுட்பம் மூலம் விவரங்களைச் சேகரிக்கலாம். ஆனால், அதில் திருத்தம் மேற்கொள்ள முடியாது. இது மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது.
இது குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "மருந்து, உணவு, தொழில் துறை, நுகர்வோர் ஆகிய பொருள்களை மக்களிடையே கொண்டுசேர்ப்பதின் அவசியத்தை இந்தப் பெருந்தொற்று நமக்கு உணர்த்தியுள்ளது.
தொழில்துறைகளில் பயன்படுத்தப்படும் சிறப்பான பிளாக் செயின் தொழில்நுட்பத்தை வகுக்க கடந்த ஓராண்டு காலத்தை எடுத்துக்கொண்டோம். அரசு, நிறுவனம், புதிய தொழில் முயற்சி நிறுவனங்கள் (ஸ்டார்ட் அப்), சர்வதேச அமைப்புகள், சிவில் சமூகத்தைச் சேர்ந்த வல்லுநர்களிடம் இதற்காக ஆலோசனை கேட்கப்பட்டது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஜியோ வருவாய் கிடுகிடு உயர்வு: கோடிகளை அள்ளிய அம்பானி!