இந்திய டெலிகாம் சந்தையில் வோடபோன் மற்றும் ஐடியா ஒரு காலத்தில் முக்கிய நிறுவனங்களாக இருந்தன. வோடபோன் நிறுவனத்தின் zoozoo விளம்பரங்களை யாரும் அவ்வளவு எளிதில் மறந்திருக்கமாட்டார்கள்.
ஆனால், ஜியோவின் வருகை இந்திய டெலிகாம் சந்தையையே புரட்டிப்போட்டது. ஜியோவின் அதிரடி இலவச டேட்டா ஆப்பர்களால் மற்ற நிறுவனங்கள் திண்டாடி போனார்கள். ஏழு நிறுவனங்களை கொண்டிருந்த இந்தியாவின் டெலிகாம் சந்தை, ஜியோவின் வருகைக்குப் பின் நான்காக (அரசின் பிஎஸ்என்எல் மற்றும் தனியார் நிறுனங்களான ஏர்டெல், ஜியோ, வோடபோன்-ஐடியா) சுருங்கியது.
ஜியோவின் ஆதிக்கத்தை எதிர்கொள்ள ஏதுவாக இந்தியாவின் இரண்டு முக்கிய டெலிகாம் நிறுவனங்களாக இருந்த வோடபோனும ஐடியாவும் ஒரே நிறுவனமாக இணைக்கப்படும் என்று 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி அறிவிக்கப்பட்டது. சுமார் இரண்டு ஆண்டுகளாக நீடித்த இந்த இணைப்பு பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.