இந்தியாவின் தொலைத்தொடர்பு துறையில் முகேஷ் அம்பானியின் ஜியோ நிறுவனம் 2016ஆம் ஆண்டு நுழைந்தது. ஜியோவின் வருகை மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்களை ஆட்டம் காண வைத்தது. சுமார் ஏழு தொலைத்தொடர்பு நிறுவனங்களைக் கொண்டிருந்த இந்தியாவில், தற்போது வெறும் நான்கு நிறுவனங்கள் மட்டுமே இருக்கின்றன. அதற்கு முக்கிய காரணம் ஜியோ என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
இந்தாண்டின் முதல் காலாண்டில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிகர லாபம் 39 விழுக்காடு வரை குறைந்தது. இருப்பினும் ஜியோவின் லாபம் மட்டும் 177.5 விழுக்காட்டிற்கும் மேல் உயர்ந்தது. சுமார் 38.8 கோடி வாடிக்கையாளர்களைக் கொண்ட ஜியோ நிறுவனத்தில் கடந்த சில வாரங்களாகவே வெளிநாட்டு முதலீட்டாளர்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டிவருகின்றனர்.
பேஸ்புக் நிறுவனம் ஜியோவின் 9.99 விழுக்காடு பங்குகளை ரூ.43,574 கோடி ரூபாய்க்கு வாங்குவதாக ஏப்ரல் 22ஆம் தேதி அறிவித்தது. அதைத்தொடர்ந்து அமெரிக்காவின் மற்றொரு முக்கிய நிறுவனமான சில்வர்லேக், ரூ. 5,656 கோடி ரூபாயை ஜியோவில் முதலீடு செய்யப்போவதாக அறிவித்தது.