கரோனா ஊரடங்கு தளர்வுகளைத் தொடர்ந்து, நெருக்கடியில் சிக்கியுள்ள பெரு நிறுவனங்கள், அதிலிருந்து மீள்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அதேபோல் சரிவைச் சந்தித்துள்ள பொருளாதாரத்தை மீட்கும் பணிகளும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பல்வேறு தொழில் துறைகளில் கடந்த அக்டோபர் மாதம் பணி அமர்த்துதல் விழுக்காடு கணிசமாக உயர்ந்து வருவதாக, நாக்குரி ஜாப் ஸ்பீக்ஸ் இன்டெக்ஸ் (Naukri JobSpeak Index) அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த அறிக்கையில், கடந்த அக்டோபர் மாதம் ஐடி, சேவைத்துறை, ரீடெய்ல், சுற்றுலாத்துறை என அனைத்து துறைகளையும் ஒன்றாக கணக்கிடுகையில் வேலை ஆட்கள் நியமிப்பு விகிதம் 17 விழுக்காடாக குறைந்துள்ளது. ஆனால், கரோனா பரவல் காரணமாக, அனைவரும் டிஜிட்டல் முறைக்குத் தள்ளப்பட்டுள்ளதால், ஐடி, சேவைத்துறையில் மட்டும் கடந்த மாதம் ஊழியர்கள் நியமிப்பு விகிதம் 7 விழுக்காடு உயர்ந்துள்ளது.
அதேபோல, நுகர்வோர் சாதனத் தயாரிப்புத் துறை (4 விழுக்காடு), விளம்பரத்துறை ( 14 விழுக்காடு) உள்ளிட்ட துறைகளில் பணி அமர்த்துதல் நடவடிக்கை அதிகரித்துள்ளது. அதேபோல பிபிஓ (BPO) துறை (5 விழுக்காடு) பிஎஃப்எஸ்ஐ (BFSI) (4 விழுக்காடு) போன்ற துறைகளில், புதிய ஊழியர்கள் நியமனம் குறைந்துள்ளது.
மேலும் தொலைக்காட்சி மற்றும் பட தயாரிப்பு துறை ( 17 விழுக்காடு), கிராப்பிக் டிசைன்ஸ் ( 17 விழுக்காடு), நிதித்துறை (7 விழுக்காடு), தொழில் மேம்பாட்டுத்துறை ( 6 விழுக்காடு) உள்ளிட்ட துறைகளில், வேலை ஆட்கள் நியமிப்பு விகிதம் அதிகரித்துள்ளது.
இந்த பணி அமர்த்துதல் நடவடிக்கை, பெரு நகங்களான பெங்களூருவில் 8 விழுக்காடு, சென்னையில் 6 விழுக்காடு, கொச்சியில் 9 விழுக்காடு, கோவையில் 5 விழுக்காடு, கொல்கத்தாவில் 4 விழுக்காடு, அகமதாபாத்தில் 6 விழுக்காடு என கடந்த அக்டேபார் மாதம் கணிசமாக உயர்ந்துள்ளது.