திருவனந்தபுரம்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமர்ப்பித்த மத்திய பட்ஜெட் 2021 குறித்து பதிலளித்த கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், இது ஒரு சாதாரண நபரின் கவலைகளை நிவர்த்தி செய்யாது, அதே நேரத்தில் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறுகையில், “நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள மத்திய பட்ஜெட் பெருநிறுவனங்களுக்கு சாதகமாக உள்ளது. புதிய தாராளமயமாக்கத்தை செயல்படுத்துகிறது. இது மத்திய பட்ஜெட் அல்ல, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் பிரதிபலிப்பு.
பட்ஜெட் பல பொதுத் துறைகளை தனியார்மயமாக்குவதையும், காப்பீட்டுத் துறையில் அன்னிய நேரடி முதலீட்டை அதிகரிப்பதையும் ஆதரிக்கிறது. இதனால் மக்கள் பாதிக்கப்படுவார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு மட்டுமே பாதையை அமைக்கும், வேளாண் சட்டங்களை அமல்படுத்துவதன் மூலம் வேளாண் துறை புறக்கணிக்கப்படும். விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள். மேலும் விவசாய சட்டங்களை திரும்ப பெறும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை என்பதையும் இந்தப் பட்ஜெட் உணர்த்துகிறது.
விவசாயிகளுக்கு மானியம் வழங்குவதை விட, அதிக கடன் கிடைக்கும்படி பட்ஜெட் வடிவமைக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் அவர்களின் பிரச்சினைகளை தீர்க்கவில்லை, அதேசமயம் அது வேளாண்மைத் துறையில் உள்ள சிக்கல்களை இன்னமும் மோசமாக்கும். மேலும், கோவிட்-19 தொற்றுநோயை அடுத்து நிதி ரீதியாக போராடும் மக்களுக்கு பட்ஜெட் எந்த நிவாரணமும் அளிக்கவில்லை.
ஓய்வூதிய உயர்வு, வருமான வரி குறைப்பு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான ஒதுக்கீடு ஆகியவற்றை பட்ஜெட் சுட்டிக்காட்டவில்லை. பொதுமக்களை வருத்தப்படுத்தும் வகையில், தொடர்ந்து பொருளாதார சமத்துவமின்மை இந்தியாவில் அதிகரிக்கும் வகையில் பட்ஜெட் உள்ளது. விவசாய என்ற பெயரில் பெட்ரோல் மற்றும் டீசலுக்கு எரிபொருள் செஸ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இது பணவீக்கத்தை அதிகரிக்கும் மற்றும் பொதுமக்களை அதிக நிதி நெருக்கடிக்கு தள்ளும். இன்று, இரும்பு, எஃகு மற்றும் மின்சாரத்தின் விலையை அதிகரிக்க திட்டங்கள் உள்ளன. இது, கட்டுமானத் துறையை மோசமாக பாதிக்கும், இது மக்கள்தொகையில் மிகப் பெரிய பகுதியைப் பயன்படுத்துகிறது. நாட்டின் பொருளாதாரம் ஒரு பெரிய நெருக்கடியைச் சந்தித்த போதிலும், பொருளாதாரத்தைத் தூண்டுவதற்கும், அதிகமான பணத்தை மக்களின் கைகளில் கொண்டு வருவதற்கும் எந்த நடவடிக்கையும் இல்லை. இது ஏமாற்றமளிப்பதாக உள்ளது” என்றார்.
இதையும் படிங்க:கேரளா தேர்தல் 2021: சிறுபான்மை கட்சிகள் இடையே முரண்பாடு, காங்கிரஸ் வெல்வது பெரும்பாடு!