இந்தியாவின் இறையாண்மை, பாதுகாப்பை உறுதிசெய்யும்விதமாக சீனாவைச் சேர்ந்த 59 செயலிகளுக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது. இந்தத் தடையைத் தொடர்ந்து இந்தியாவில் இந்த 59 செயலிகளும் பதிவிறக்கம் செய்ய முடியாத வகையில் கூகுள் ப்ளே ஸ்டோரிலும், ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் நீக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இந்தத் தடை குறித்து டிக்டாக் நிறுவனத்தின் இந்தியத் தலைவர் நிக்கில் காந்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "மத்திய அரசு டிக்டாக் உள்ளிட்ட 59 செயலிகளுக்குத் தடைவிதித்துள்ள நிலையில், இது தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி விளக்கமளிக்க டிக்டாக் நிறுவனம் தயாராக உள்ளது.
தகவல் பாதுகாப்பை உறுதிசெய்யும் டிக்டாக் நிறுவனம் இந்தியாவின் சட்ட விதிகளுக்குள்பட்டே செயல்பட்டுவருகிறது. இந்திய பயனாளிகளின் எந்த விவரங்களையும் சீன உள்ளிட்ட வெளிநாட்டு அரசுகளுக்கு டிக்டாக் இதுவரை பகிர்ந்ததில்லை; பகிரப்போவதுமில்லை என்பதை உறுதியாகக் கூறுகிறோம்.
இணையதளத்தை ஜனநாயகப்படுத்திய டிக்டாக் 14 இந்திய மொழிகளில் செயல்பட்டுவருகிறது. இந்தச் செயலியை சார்ந்து பல லட்ச வாடிக்கையாளர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் ஆகியோர் செயல்பட்டுவரும் நிலையில் இந்தத் தடை இவர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்" என நிக்கில் காந்தி கூறியுள்ளார்.
இதையும் படிங்க:வீழ்ச்சியுடன் முடிந்த பங்குச் சந்தை!